மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட மோடி பதவி விலக வேண்டும்: மம்தா பானர்ஜி கருத்து


கொல்கத்தா: “பாஜக 400 இடங்களில் வெல்லும் என்று பிரச்சாரம் மேற்கொண்டு வந்தது. ஆனால், அக்கட்சியால் தனிப் பெரும்பான்மை பெற முடியவில்லை. மக்களின் நம்பிக்கையை மோடி இழந்துவிட்டார். எனவே, அவர் பதவியிலிருந்து விலக வேண்டும்” என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

400 இடங்களில் வெல்வோம் என்று பாஜக தலைவர்கள் கூறிவந்த நிலையில், பாஜக கூட்டணி 290 இடங்களிலேயே வென்றுள்ளது. இதில் பாஜக மட்டும் 240 இடங்களில் வென்றுள்ளது. தனிப்பெரும்பான்மை பெற 272 இடங்களில் வெல்ல வேண்டும். தற்போது பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்கும் சூழலில் அக்கட்சி உள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டார் என்றும் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “மோடியும் அமித் ஷாவும் பெரும் அட்டூழியங்களை நிகழ்த்தினர். பணத்தை வாரி இறைத்தனர். இதற்கு மத்தியிலும் இண்டியா கூட்டணி வென்றுள்ளது.

400 இடங்களில் வெல்வோம் என்று ஆணவமாக பாஜக தலைவர்கள் பேசி வந்தனர். ஆனால், அவர்களால் தனிப் பெரும்பான்மை பெற முடியவில்லை. அயோத்தியில் பாஜக தோற்றுள்ளது. உங்களால் ஒருபோதும் இண்டியா கூட்டணியை உடைக்க முடியாது” என்று தெரிவித்தார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் தனித்து களமிறங்கிய திரிணமுல் காங்கிரஸ் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 29 இடங்களில் வென்றது. பாஜக 12 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் வென்றுள்ளன.