அரசியலமைப்பு சட்டத்தை காக்கவே இந்த போராட்டம்: ராகுல் காந்தி கருத்து


ராகுல் காந்தி | கோப்புப்படம்

புதுடெல்லி: அரசியலமைப்பு சட்டத்தை காக்கவே இந்த போராட்டத்தை நடத்தியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் தெரிவித்தார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உட்பட பல மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்று ராகுல் காந்தி பேசியதாவது: இந்த தேர்தல் ஒரு அரசியல் சக்திக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல. சிபிஐ, நீதித்துறை, அமலாக்கத் துறை ஆகிய அமைப்புகளை பாதுகாப்பதற்கான போராட்டமும் கூட. ஏனெனில், இந்த அமைப்புகளை நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா தங்களின் கைப்பாவையாக வைத்திருந்தனர்.

அரசியலமைப்பு சட்டத்தை காப்பதற்கும் இந்த தேர்தலில் போராட்டம் நடத்தப்பட்டது. (அப்போது அவர் கையில் அரசியல் சாசனத்தின் நகலை கையில் ஏந்தியிருந்தார்). இந்திய குடிமக்கள் அதை பாதுகாக்க முயற்சி எடுப்பார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்.

நாட்டின் மிகவும் பின்தங்கிய குடிமக்கள் அரசியலமைப்பை காப்பாற்றுவதற்கு பெரும் பங்கை வழங்கி உள்ளனர். இதற்காக, அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன். இவ்வாறு ராகுல் கூறினார்.