சந்திரபாபு, நிதிஷ் நிபந்தனை முதல் கூட்டணி ஆட்சிக்கு பாஜக தீவிரம் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


> கூட்டணி ஆட்சிக்கு பாஜக தீவிரம்: மக்களவைத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. நேற்று வெளியான மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமாரின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களும், ஜேடியு 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இவர்களின் ஆதரவில் ஆட்சி அமைக்க பாஜக முயற்சிக்கிறது. அதற்கான கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

> நிதிஷ், சந்திரபாபுவுக்கு இண்டியா கூட்டணி வலை: மக்களவை தேர்தல் முடிவுகளால் தேசிய அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. இதற்காக, என்டிஏவின் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமாருக்கு வலை வீசி வருகின்றனர்.

> “என்டிஏ கூட்டணியில் தான் அங்கம் வகிக்கிறேன்”-சந்திரபாபு நாயுடு: “தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அங்கம் வகிக்கிறேன். இன்று நடக்கும் என்டிஏ கூட்டணியின் கூட்டத்துக்கு செல்கிறேன்” என்று கூட்டணி குறித்து தனது நிலைப்பாட்டை சந்திரபாபு நாயுடு தெளிவுபடுத்தியுள்ளார். இதன்மூலம் பாஜக கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது.

> ஆதரவளிக்க டிடிபி, ஜேடியு நிபந்தனை: மக்களவை தேர்தலில் தனி பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி பலத்துடன் ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வரும் நிலையில் ஆட்சியமைக்க கூட்டணி கட்சிகள் சில நிபந்தனைகள் விதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திரா மற்றும் பிஹார் ஆகிய இரண்டு மாநிலங்களும் சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன. இந்தநிலையில் ஆட்சிக்கு ஆதரவளிக்க சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் இந்த கோரிக்கையை நிபந்தனைகளாக விதித்து வருவதாக கூறப்படுகிறது. இது தவிர, இருகட்சிகளுமே மக்களவை சபாநாயகர் பதவி தங்களுக்கு வேண்டும் என்ற விருப்பத்தை பாஜகவிடம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

> டெல்லி சென்றார் முதல்வர் ஸ்டாலின்: டெல்லியில் நடைபெறும் இண்டியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க புதன்கிழமை காலை டெல்லி புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி 232 இடங்கள் வெற்றி பெற்ற நிலையில், இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழகம், புதுச்சேரியில் திமுக கூட்டணி 40-க்கு 40 தொகுதிகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.

> “தமிழகம் திராவிட பூமி என்பதை தேர்தல் உணர்த்தியிருக்கிறது”: தமிழ்நாட்டில் திராவிட மாடல் நல்லாட்சி நடத்துகின்ற மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த இண்டியா கூட்டணி, அவர் பிரகடனம் செய்தவாறு 40 தொகுதிகளிலும் வெற்றி முரசு கொட்டி தமிழ்நாடு திராவிட பூமி என்பதை இந்தத் தேர்தல் நாட்டுக்கு உணர்த்தியிருக்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

> ஸ்ரீபெரும்புதூரில் 29 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு: ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் 8-வது முறையாக திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு வென்றுள்ளார். இம்முறை அதிமுக வேட்பாளரை விட 4,87,029 வாக்குகள் வித்தியாசத்தில் அமோகமாக வெற்றி பெற்றுள்ளார். அதேசமயம் இந்தத் தொகுதியில் 26,465 வாக்குகள் பெற்று 5-வது இடத்தை நோட்டா பெற்றுள்ளது. இந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தவிர்த்து தமாகா, நாம் தமிழர் உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். மொத்தம் பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்குகளைப் பெற்றிருந்தால் மட்டுமே அவர்களது டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

> ஏற்றத்தில் இந்திய பங்குச் சந்தை: மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் இந்திய பங்குச் சந்தை மீண்டும் ஏற்றம் கண்டு வருகிறது. புதன்கிழமை காலை சந்தை வர்த்தகம் தொடங்கியது முதலே சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி என இரண்டிலும் புள்ளிகள் உயர்ந்துள்ளன.

தேர்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியான நிலையில் சுமார் 6,000 புள்ளிகள் வரை சென்செக்ஸ் சரிந்தது. நிஃப்டி 50-ம் சுமார் 1,400 புள்ளிகளுக்கு கீழ் சரிந்திருந்தது. இந்நிலையில், இன்று காலை சென்செக்ஸ் சுமார் 1,700 புள்ளிகளுக்கு மேல் சென்றது. அதே போல நிஃப்டி 50-ம் சுமார் 456 புள்ளிகளுக்கம் அதிகமாக பெற்றுள்ளது.

> பள்ளிகள் திறப்பை ஒட்டி 705 சிறப்புப் பேருந்துகள்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பின்படி வரும் 10-ம் தேதி (திங்கள்) தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், பள்ளிகள் திறப்பு, வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

> பிரதமர் மோடிக்கு இத்தாலிய பிரதமர் வாழ்த்து: மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி வெற்றி பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தாலிய பிரதமர் ஜியார்ஜியா மெலோனி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.