பள்ளிகள் திறக்கப்படுதால் ஆதார் மையங்களுக்கு திரளும் மக்கள் கூட்டம்: அலைக்கழிக்கப்படும் அவலம் @ உடுமலை


உடுமலை: பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு பள்ளிகளில் ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஆதார் மையங்களை தேடி செல்லும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

உடுமலையில் தலைமை தபால் நிலையம், வட்டாட்சியர், நகராட்சி அலுவலகங்களில் ஆதார் சேவை மையங்கங்கள் இயங்கி வருகிறது. இது தவிர 100-க்கும் மேற்பட்ட தனியார் சேவை மையங்களும் இயங்கி வருகின்றன. இதில் ஆதார் அடையாள அட்டையில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு உள்ளிட்ட விவரங்களை அரசு சேவை மையங்களில் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த மையங்களில், ஒருநாளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களுக்கே சேவை வழங்கப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க அதிகாலையிலேயே மக்கள் வரவழைக்கப்பட்டு, முதலில் வரும் நபர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்படுகிறது. பின் அலுவலக நேரத்தில் டோக்கன்படி வருவோருக்கு ஆதார் சேவைகள் வழங்கப்படுகிறது. டோக்கன் இன்றி வருவோருக்கு சேவை வழங்கப்படுவதில்லை. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

ஆகவே பள்ளிகளுக்கு தேவையான ஆவணங்கள் வழங்க வேண்டி பெற்றோர் அதற்கான தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆதார் திருத்தம் தொடர்பான பணிகளில் உரிய சேவை கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது: “கூடுதல் கணினி மற்றும் தேவையான எண்ணிக்கையில் ஊழியர்களை நியமிக்காமல், குறைவான பணியாளர்களை கொண்டு இம்மையங்கள் இயங்குகிறது.

எனவே ஒரு நாளில் 40 பேருக்கு மட்டுமே பதிவு செய்ய முடியும் என்பதால், அதிகாலை 3 மணிக்கே வந்து வரிசையில் நின்று டோக்கன் பெற்று செல்வோருக்கு மட்டுமே இச்சேவை கிடைக்கிறது. மக்கள் 3 மணிக்கே வந்தாலும், 7 மணியளவில் தான் ஊழியர்கள் வருகின்றனர். பின் 5 நிமிடங்களில் டோக்கன் விநியோகித்து சென்று பின் 10 மணிக்கு அலுவலகம் வந்து பதிவுகளை தொடங்குகின்றனர். இதற்காக 50 கி.மீ., தொலைவில் இருந்து வரும் பொதுமக்கள் காலைக் கடனை கழிக்கவும், காலை உணவு அருந்த ஓட்டல்களை நாடிச் செல்லும் நிலை உள்ளது.

மேலும் கைரேகை பதிவுகளுக்காக குழந்தைகளையும் உடன் அழைத்து வருவோரின் நிலை இன்னும் பரிதாபமாக உள்ளது. அரசின் அனைத்து அலுவல்களும் டிஜிட்டல் மயமாகியபோதும், பணியாளர் குறைவால் மக்கள் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி திறப்பதை முன்னிட்டு சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும்” என்றனர்.

பள்ளிகளுக்கு விநியோகிக்க அடுக்கி வைக்கப்பட்டுள்ள பாடபுத்தகங்கள்.

இதனிடையே, உடுமலை கோட்டத்தில் உள்ள 241 அரசு பள்ளிகளில் பயிலும் 14,500 மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உடுமலையில் உள்ள 2 வட்டார கல்வி அலுவலகங்களின் கீழ் மொத்தம் 118 அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் சுமார் 7500 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இம்மாணவர்களுக்கான அரசின் இலவச பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுக்கள் கடந்த சில நாட்களாக அந்தந்த பள்ளிகளுக்கே நேரடியாக கொண்டு சென்று விநியோகிக்கப்பட்டது.

இதே போல குடிமங்கலம் வட்டார கல்வி அலுவலகத்துக்குட்பட்ட 59 பள்ளிகளில், சுமார் 3500 மாணவர்களுக்கான புத்தகங்களும், மடத்துக்குளம் வட்டாரத்தில் உள்ள 64 பள்ளிகளில் பயிலும் சுமார் 3600 மாணவ, மாணவிகளுக்கான பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணி தொடர்பான பயிற்சிக்கு ஆசிரியர்கள் சென்றதன் காரணமாக ஒரு சில பள்ளிகளுக்கு மட்டும் இன்னும் புத்தகங்கள் சென்றடையாமல் உள்ளது. அவை வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் சரிசெய்யப்படும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறும்போது, “கடந்த ஆண்டை காட்டிலும் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அரசு இட ஒதுக்கீடு , இலவச கல்வி, பாடபுத்தகங்கள், குறிப்பேடு என கல்வி சார்ந்து அனைத்தும் அரசால் இலவசமாக வழங்கப்படுவது குறித்து பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான பாட புத்தகங்கள் தேவையான அளவு விநியோகிக்கப்பட்டுள்ளது” என்றனர்.