கண்டோன்மெண்ட் போர்டு பள்ளிகளில் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு


பல்லாவரம்: பரங்கிமலை - பல்லாவரம் கண்டோன்மெண்ட் போர்டு நிர்வாகத்தின் கீழ் பரங்கிமலையில் காமராஜர் கண்டோன்மெண்ட் ஆரம்பப்பள்ளி, காந்தி கண்டோன்மெண்ட் மான்டசரி பள்ளி, டாக்டர் எம்.ஜி.ஆர் கண்டோன் மெண்ட் உயர்நிலைப் பள்ளி, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி (Special School) ஆகிய நான்கு பள்ளி மற்றும் பல்லாவரத்தில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் கண்டோன் மெண்ட் ஆரம்பப் பள்ளி, டாகடர். அம்பேத்கார் கண்டோன் மெண்ட் மான்டசரி பள்ளி, அறிஞர் அண்ணா கண்டோன் மெண்ட் உயர்நிலைப் பள்ளி எனும் மூன்று பள்ளிகள் என மொத்தம் ஏழு பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பள்ளிகள் அனைத்திலும் பரங்கிமலை, பல்லாவரம் மற்றும், அதன் சுற்றுப்பகுதி மக்களின் சுமார், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிள்ளைகள் கல்வி பயின்று வருகின்றனர்.

2024 - 25ம் கல்வியாண்டிலிருந்து பரங்கிமலை மற்றும், பல்லாவரத்தில் செயல்படுகின்ற, 1ம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரையிலான தமிழ் வழிக்கல்வி மற்றும், மாண்டசரி ஆங்கில மழலையர் (LKG to 5 th std) ஆரம்ப கல்வி நிலையங்களில் (Primary Schools) பயிலும் மானவர்களிடமிருந்து, ரூ.600 கல்வி மேம்பாட்டுக் கட்டணமாக வசூலிக்க வேண்டுமென, தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிகளில் பயிலும் இரு பாலின மாணவர்களுக்கு இதுநாள் வரை இலவசமாக வழங்கப்பட்டு வந்த பாட நூல்கள், குறிப்பேடுகள், சீருடைகள், பைகள், காலணிகள் ஆகியவற்றிற்கும் அதற்குரிய விலையை வசூலிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கண்டோன் மெண்ட் நிர்வாகத்தின் இந்த செயலானது பகுதிவாழ் மக்களிடையே அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜா.பூபாலன்

இது குறித்து முன்னாள் கண்டோன்மெண்ட் போர்டு உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியுமான ஜா.பூபாலன் கூறியது: ”கண்டோன் மெண்ட் போர்டு நிர்வாகம் கடந்த ஆண்டே கட்டணம் செலுத்த வேண்டுமென பெற்றோர்களை நிர்பந்தித்தது. இது தொடர்பாக கடந்த ஆண்டு தமிழக அரசிடம் புகார் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இந்த ஆண்டு மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டுமென நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கண்டோன்மெண்ட் மற்றும் சுற்றுப் பகுதிகளில் வாழக்கூடிய ஏழை, எளிய மக்களின் குழந்தைகளும் ஆங்கில கல்வி அறிவு பெற வேண்டும் எனும் உயரிய நோக்கத்தில் இலவசமாக பள்ளி தொடங்கப்பட்டது.

மேலும், இந்திய அரசமைப்பு சட்டம் (Indian Constitution act) "21A" இல் வழங்கப்பட்டுள்ள, 6 முதல், 14 வயது வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் இலவச கல்வியளிக்க வேண்டும் என்ற அடிப்படை உரிமைக்கும், பிரிவு "62" கண்டோன்மெண்ட் சட்டம் "2006" (sec "62" of Cantonments act "2006")இல் குறிப்பிட்டுள்ள கண்டோன் மெண்ட் நிர்வாகத்தின் கட்டமைப்புக்கும் இது எதிரான செயலாகும். அனைவருக்கும் கல்வி (Sarva siksha abhiyan) எனும் அரசின் கொள்கைக்கு எதிரான நடவடிக்கையும் ஆகும்.

ஒவ்வொரு உள்ளாட்சி நிர்வாகங்களும் அதன் நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதியில் வாழும் மக்களுக்கு, இலவச ஆரம்பக் கல்வி (Primary Education) மற்றும், ஆரம்ப சுகாதாரத்தையும் (Primary Health) அளிக்க வேண்டும் என்பது அதன் கடமையாகும். ஆனால் அதற்கு நேரெதிராக கண்டோன் மெண்ட் போர்டு நிர்வாகத்தின் செயல்பாடு உள்ளது. இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். கண்டோன்மெண்ட் போர்டு நிர்வாகமானது பள்ளி மேம்பாட்டுக் கட்டண வசூலை கை விடாத நிலையில், இது குறித்து சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.