5 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்: முதியவர் மீது போக்சோ வழக்கு @ விருதுநகர்


விருதுநகர்: விருதுநகர் அருகே 5 வயது சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்த 60 வயது முதியவர் மீது போக்சோ வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் அருகே உள்ள பெரியதாதம்பட்டியில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு, முப்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் பெண் தொழிலாளர்கள் பலர் தங்களது குழந்தைகளை தங்களுடன் பட்டாசு ஆலைக்கு அழைத்து வருவது வழக்கம். ஆலையில் உள்ள ஒரு அறையில் குழந்தைகள் அனைவரும் விளையாடுவர்.

இந்நிலையில், பட்டாசு ஆலைக்கு பெண் ஒருவரால் அழைத்துவரப்பட்ட 5 வயது சிறுவனை, ஆலையில் அலுவலகப் பொறுப்பில் பணியாற்றி வரும் பிஹார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தைச் சேர்ந்த ராமஸ்வர்த் பஸ்வான் (60) என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுவன் வீட்டுக்குச் சென்றதும் இரவு தனது மர்ம உறுப்பில் வலி உள்ளதாகக் கூறி அழுதுள்ளார். அவரிடம் பெற்றோர் விசாரித்தபோது, பட்டாசு ஆலையில் பணியாற்றும் ராமஸ்வர்த் பஸ்வான் மர்ம உறுப்பைப் பிடித்து இழுத்து பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுவன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார். இது குறித்து சிறுவனின் பெற்றோர் விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார் போக்சோ வழக்குப் பதிவு செய்து ராமஸ்வர்த் பஸ்வானை கைது செய்தனர்.