தாராபுரத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: கட்டிட மேஸ்திரி ‘போக்சோ’வில் கைது


கைது செய்யப்பட்ட சிவகுமார்.

உடுமலை: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட மேஸ்திரியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள தேர்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் சிவகுமார் (38), இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகளும் மகனும் உள்ளனர். இந்த நிலையில் கணவனை இழந்த 35 வயது பெண் ஒருவருடன் சிவக்குமார் நெருக்கமாக பழகி வந்துள்ளார். மேலும், அப்பெண்ணின் 17 வயது மகளான கல்லூரி மாணவிக்கும் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனிடையே, மாணவியின் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக அவரது தாயார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், இது குறித்து மாணவியின் தாயார் அளித்த பதில் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் சந்தேகமடைந்த அரசு மருத்துவர்கள், தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு நேரில் சென்ற அனைத்து மகளிர் போலீஸார் அங்கு வைத்து மாணவியிடமும் அவரது தாயாரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கட்டிட மேஸ்திரி சிவகுமார் தன்னை ஏமாற்றி பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிவகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரை கைது செய்து நீதிமன்ற ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், பாதிக்கபட்ட மாணவிக்கு அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.