திருப்பூரில் பெண் தொழிலாளி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞர் கைது


பிரதிநிதித்துவப் படம்

திருப்பூர்: திருப்பூர் வித்யாலயத்தில் வசித்து வருபவர் முத்துக்குமார். இவரது மனைவி சுந்தரி (35). இவர் அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 13-ம் தேதி பல்லடம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், சுந்தரியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை சுந்தரியின் மீது ஊற்றி தீ வைத்துவிட்டு, தப்பியோடினார். சுந்தரியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், தீயை அணைத்து பலத்த காயங்களுடன் அவரை மீட்டனர்.

இதையடுத்து, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுந்தரி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வீரபாண்டி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இந்நிலையில், நேற்று மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக போலீஸார் கூறும்போது, ‘‘சுந்தரிக்கும், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த மணிகண்டன் (32) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மணிகண்டனை வெட்டிய வழக்கில் சுந்தரியின் கணவர் கைது செய்யப்பட்டார். வெட்டப்பட்ட ஆத்திரத்தில் இருந்த மணிகண்டன், சுந்தரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார்’’ என்றனர்.

x