வியாபாரியிடம் 802 கிராம் நகையை பெற்று மோசடி - கோவையில் இளைஞர் கைது


பிரதிநிதித்துவப் படம்

கோவை: கோவை செட்டி வீதியை சேர்ந்தவர் பாலசிங்கம் (46). நகைப்பட்டறை வைத்துள்ளார். இவர், கடை வீதி போலீஸாரிடம் சமீபத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.

அதில்,‘‘எனக்கு செல்வபுரத்தை சேர்ந்த ராம்குமார் (26) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. அவர் நகைகளை தந்தால், சொந்த ஊரான கோவில் பட்டிக்கு சென்று ஆர்டர் பெற்றுத் தருகிறேன் என கூறினார். இதை நம்பி நான் 802 கிராம் அளவுக்கான நகைகளை அளித்தேன். ஆனால், கொடுத்து பல மாதங்களாகியும் நகைகளை திருப்பித் தரவில்லை. அதற்கான பணத்தையும் தரவில்லை.

அவரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக, ராம் குமார் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுத்து எனது நகைகளை மீட்டுத் தர வேண்டும்’’எனக் கூறியிருந்தார். அதன் பேரில், மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் ராம்குமார் மீது போலீஸார் வழக்குப் பதிந்து நேற்று அவரை கைது செய்தனர்.