ராமநாதபுரம்: அரசு பள்ளி ஆசிரியர் வெட்டிக் கொலை


ஆசிரியர் கண்ணன்.

ராமநாதபுரம்: கமுதி அருகே கே.பாப்பாங்குளம் அரசு பள்ளி ஆசிரியர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கே.பாப்பாங்குளம் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் கண்ணன் (51). இவர் இன்று காலை வழக்கம் போல் கமுதியிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் கே.பாப்பாங்குளம் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கே.பாப்பாங்குளம் செல்லும் வழியில் மர்ம நபர்கள் இடைமறித்து அரிவாளால் அவரை வெட்டி கொலை செய்தனர்.

இது குறித்து கமுதி டிஎஸ்பி இளஞ்செழியன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை செய்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் ரியல் எஸ்டேட் மற்றும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். பள்ளி திறக்கும் முதல் நாளே ஆசிரியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதால் அப்பகுதி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.