மயக்க மருந்து கொடுத்து 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: துணை நடிகை, கல்லூரி மாணவர் கைது


பிரதிநிதித்துவப் படம்

சென்னை: மயக்க மருந்து கலந்து கொடுத்து 15 வயது சிறுமி, இருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் சென்னையில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை தி.நகர் காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் சென்னை சேத்துப்பட்டில் உள்ள பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு சில தினங்களாக வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர்.

அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர் நடந்த விவரம் குறித்து மகளிடம் கேட்டனர். அப்போது, அவர் மயக்க நிலையில் இருந்த என்னை இளைஞர்கள் இருவர், அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரிடம் சிறுமி அளித்த பரபரப்பு வாக்குமூலம்: நண்பர்களுடன் அண்ணா நகரில் உள்ள காபிஷாப்புக்கு அடிக்கடி செல்வேன். 2 மாதங்களுக்கு முன்னர் அங்கு வைத்து சினிமா ஆடை வடிவமைப்பாளரும், துணை நடிகையுமான இளம் பெண் அகிரா அறிமுகமானார். அவர் நட்புடன் பழகினார்.

இந்நிலையில், அவர் கடந்த மே 13-ம் தேதி தனக்கு பிறந்தநாள் விழா நடைபெறுகிறது என என்னை அழைத்தார். சாலிகிராமத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றேன். அங்கு அகிராவுடன் 2 ஆண் நண்பர்கள் இருந்தனர். அப்போது, எனக்கு ஸ்வீட் கொடுத்தனர். மேலும், திரவ நிலையில் இருந்த இனிப்பான ஒன்றை கட்டாயப்படுத்தி அருந்த செய்தனர். இதனால், எனக்கு மயக்கம் ஏற்பட்டது.

கொலை மிரட்டல்.. அரை மயக்கத்தில் கிடந்த என்னை, அகிராவுடன் வந்த 2 ஆண் நண்பர்கள் அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமை செய்தனர். மறுநாள் காலையில் மயக்கம் தெளிந்து எனக்கு நிகழ்ந்த கொடுமையை நினைத்து அழுது கொண்டிருந்த என்னிடம் வந்த அகிரா, வந்தவர்கள் இருவரும் பயங்கரமானவர்கள். நடந்ததை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவார்கள் என மிரட்டினார்.

பின்னர், நடந்த விவரத்தை எனது மூத்த சகோதரியிடம் தெரிவித்தேன். அவர் பெற்றோரிடம் தெரிவித்தார். அதன் பின்னர் பெற்றோர் என்னை மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இவ்வாறு அந்த சிறுமி போலீஸில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீஸார் பெருங்களத்தூரைச் சேர்ந்த அகிராவை கைது செய்தனர். அவரது காதலன் எனக் கூறப்படும் கல்லூரி மாணவர் சோமேஷுக்காக சிறுமியை ஏமாற்றி அழைத்து வந்ததாகவும், சம்பவத்தன்று சோமேஷ் அவரது நண்பர் வில்லியம்ஸ் ஆகியோர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. அகிரா, சோமேஷ் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள வில்லியம்ஸை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.