ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உபகரணங்களை அடித்து நொறுக்கிய ரவுடி கும்பல்


சென்னை: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்களை அடித்து நொறுக்கிய ரவுடி கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மயிலாப்பூர், தேனாம்பேட்டை, அபிராமபுரம் உள்ளிட்ட பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் இரவு போலீஸார் அந்த பகுதிகளில் தீவிர காண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அபிராமபுரம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த மயிலாப்பூரைச் சேர்ந்த சரண், மந்தவெளியைச் சேர்ந்த ராஜேஷ், தினேஷ் ஆகிய 3 பேரை அபிராமபுரம் போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும் வகையில் மருத்துவ பரிசோதனை சான்றிதழை பெற ராயப்பேட்டை அரசுமருத்துவமனைக்கு 3 பேரையும் போலீஸார் நேற்று மதியம் அழைத்து வந்தனர். 3 பேருக்கும் அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, திடீரென மருத்துவமனைக்கு வந்த ரவுடி கும்பல், அவசர சிகிச்சை பிரிவுக்குள் நுழைந்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் விடுவிக்குமாறு போலீஸாருடன் தகராறில் ஈடுபட்டனர். போலீஸார், அவர்களை விடுவிக்க முடியாது, இங்கிருந்து உடனே கலைந்து செல்லுங்கள் என அவர்களை எச்சரித்தனர்.

பிளேடால் அறுத்துக் கொண்டு.. இதனால், ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், அவர்களை விடுவிக்க கோரி திடீரென கையில் வைத்திருந்த பிளேடால் தங்களை தாங்களே கைகளில் அறுத்துக் கொண்டனர். தொடர்ந்து, அவசர சிகிச்சை பிரிவில் இருந்த மருத்துவ உபகரணங்களை அந்த கும்பல் அடித்து நொறுக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டது.

மருத்துவமனையில் அட்டகாசத்தில் ஈடுபட்ட ரவுடி கும்பலை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். மடக்கிப் பிடிக்க முயன்ற போலீஸாரிடம் இருந்து அந்த கும்பல் தப்பி ஓடியது. இதையடுத்து, மருத்துவ பரிசோதனை முடித்துவிட்டு, 3 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்த போலீஸார், மருத்துவமனையில் அட்டகாசம் செய்த ரவுடி கும்பலை அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவு உதவியுடன் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, நோயாளிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது