சென்னை: போதைப்பொருள் நடமாட்டம் குறித்து போலீஸாருக்கு தகவலளித்த பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு


சென்னை: டிபி சத்திரத்தில் போதைப்பொருள் நடமாட்டம் கொடுத்து போலீஸாருக்கு தகவல் அளித்த இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

சென்னை டிபி சத்திரம் ஜோதியம்மாள் நகர் ஒன்பதாவது தெருவை சேர்ந்தவர் அமுதா (29). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் தப்பி ஓடினர். நல்வாய்ப்பாக அமுதாவுக்கோ, அவரது குடும்பத்தினருக்கோ காயமோ, சேதமோ ஏற்படவில்லை. இருப்பினும் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அமுதா இதுகுறித்து டிபி சத்திரம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடம் விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.

தடைய அறிவியல் நிபுணர்களும் சம்பவ இடம் விரைந்து பெட்ரோல் குண்டுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து இது குறித்து போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். முதல் கட்டமாக மனோஜ் சந்தோஷ் ஆகிய இருவர் மீது போலீஸாரின் சந்தேக பார்வை விழுந்துள்ளது.

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட அமுதா அப்பகுதியில் நடைபெற்ற கஞ்சா உள்பட போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக போலீசாருக்கு அடிக்கடி ரகசிய தகவல்களை கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா அல்லது இதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா எந்த கோணங்களில் தனிப்படை போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முதற்கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

x