கஞ்சா விற்பனை வழக்கில் பாமக மாவட்ட செயலாளரின் மனைவி கூட்டாளிகளுடன் கைது @ சென்னை


சென்னை: கஞ்சா விற்பனை வழக்கில் பாமக மாவட்ட செயலாளரின் மனைவி அவரது கூட்டாளிகள் 5 பேருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னையில் கஞ்சா உட்பட போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்க “போதை தடுப்புக்கான நடவடிக்கை" என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தீவிர கண்காணிப்பு, ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் பேசின் பாலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் புளியந்தோப்பு ஹஜ் கட்டிடம் சந்திப்பு அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்ததாக புரசைவாக்கம் தாண்டவம் தெருவைச் சேர்ந்த உஷா என்ற பானுமதி (41), புளியந்தோப்பு மியா என்ற ஆனந்த வள்ளி (36), இவரது மகள் மோனிஷா (18), அதே பகுதியைச் சேர்ந்த வீரராகவன் (32), ஸ்ரீதர் என்ற ராகேஷ் (21), முகமது நசீர் (21) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

விசாரணையில் கைது செய்யப்பட்ட பானுமதி மற்றும் ஆனந்தவள்ளி ஆகியோர் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பதும், பானுமதி மீது 6 கஞ்சா வழக்குகளும், ஆனந்தவள்ளி மீது 9 கஞ்சா வழக்குகளும், வீரராகவன் மீது 1 கஞ்சா மற்றும் 11 அடிதடி வழக்குகளும் உள்ளது தெரியவந்தது. மேலும், பானுமதி பாமக வட சென்னை மேற்குமாவட்ட செயலாளர் சரவணனின் மனைவி என போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

x