ராமேசுவரத்தில் இருந்து சட்ட விரோதமாக படகு மூலம் சென்ற 5 பேர் மன்னாரில் கைது


இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 7 பேர்கள்.

ராமேசுவரம்: ராமேசுவரத்திலிருந்து சட்ட விரோதமாக படகு மூலம் சென்ற 5 பேர் மன்னாரில் திங்கட்கிழமை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

திங்கட்கிழமை அதிகாலை இலங்கையில் உள்ள மன்னார் மாவட்டம் ஊர்முனை கடற்பகுதியில் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்களை தலைமன்னார் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் காவல்நிலையத்தில் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், 7 பேர்களில் விக்னராஜ் துஷாந்தன் (37), செலஸ்டின் சுரேஷ் குமார் (39), ரேத் அப்சலோன் (24), வீரசிங்கம் சுஜீவன் (26), சந்திரசேகரன் விஜித்குமார் (38) ஆகிய ஐந்து பேர் அகதிகளாக தமிழகத்தில் உள்ள வெவ்வேறு அகதிகள் முகாம்களில் தங்கியிருந்துள்ளனர்.

5 பேர்களையும் ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த ஒரு நாட்டுப் படகு மூலம் மன்னார் ஊர்முனை கடற்பகுதியில் இறக்கி விட்டுச் சென்றுள்ளதும், மீதும் இருவரும் கடற்கரையில் 5 பேர்களையும் வரவேற்க காத்திருந்த அவர்களின் உறவினர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த 5 பேர் மீது குற்றப் பின்னணி எதுவும் உள்ளதா என தொடர்ந்து இலங்கை கடற்படையினரும், போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.