பூந்தமல்லி அருகே மது போதையில் தகராறு செய்த கணவன் கொலை: மனைவி கைது


திருவள்ளூர்: பூந்தமல்லி அருகே மது போதையில் தகராறு செய்த கணவன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மனைவி கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே உள்ள நசரப்பேட்டை யமுனா நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி மங்களலட்சுமி பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஊர் காவல் படையில் பணிபுரிந்து வந்தார்.

மது அருந்தும் பழக்கம் கொண்ட சீனிவாசன் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் வீண் தகராறில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில், கடந்த இரு நாட்களுக்கு முன் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த சீனிவாசன், மங்களலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால், கோபமடைந்த மங்களலட்சுமி, வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியால் குத்தியதில், படுகாயமடைந்த சீனிவாசன், பூந்தமல்லி பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று சீனிவாசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த நசரத்பேட்டை போலீஸார், மங்களலட்சுமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.