புதுச்சேரி ஜிம் மாஸ்டர் கொலை வழக்கு: பீர் குடிப்பதில் தகராறு என கைதானவர்கள் வாக்குமூலம்


புதுச்சேரி: புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட ஜிம் மாஸ்டரின் உடல் இன்று போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது. பீர் குடிப்பதில் ஏற்பட்ட போட்டியால் இக்கொலை நடந்ததாக பிடிபட்டோர், போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

புதுவை வம்பாகீரப்பாளையம் தெப்பக்குளம் வீதியை சேர்ந்த வீரமணி மகன் விக்கி என்ற மணிகண்டன் (28). ஜிம் மாஸ்டரான இவருக்கு பிரான்ஸ் பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று நடந்த மோதலில் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, 17 வயது சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே இந்த கொலை 2 சமூகத்துக்கு இடையே மோதலை உருவாக்கும் நிலையை ஏற்படுத்தியது. இதனால் வம்பாகீரப்பாளையம் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. கொலையான மணிகண்டன் சமூகத்தை சேர்ந்தவர்கள் கொலையாளிகளின் வீடுகளையும் அவர்களது உறவினர்கள் வீடுகளையும் நேற்று சூறையாடினர்.

தொடர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. போலீஸார், அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து நேற்று வம்பாகீரப்பாளையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் குவிக்கப்பட்டனர். மணிகண்டன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று இறுதிச்சடங்கு நடந்தது.

இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இன்றும் 2-வது நாளாக துப்பாக்கி ஏந்திய போலீஸார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். இன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டது. இறுதியாக சன்னியாசி தோப்பு இடுகாட்டில் ஜிம் மாஸ்டரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள நால்வரும் போலீஸாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், “ஜிம் மாஸ்டர் மணிகண்டன், வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த சாமிநாதனின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றார். அப்போது அசோக் அவரை பீர் அருந்த அழைத்தார். அசோக்கும், மணிகண்டனும் பாண்டி மெரீனா செல்லும் சாலையில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானம் பின்புறம் உள்ள நுழைவு வாயில் அருகே பீர் அருந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது கார்த்திகேயன், ஸ்ரீகாந்த் மற்றும் சிறுவன் ஒருவனும் அங்கு வந்தனர். அவர்களும் சேர்ந்து பீர் அருந்தினர். 2 பாட்டில் பீரை குடித்தவுடன் மணிகண்டனுக்கு போதை ஏறியது. அப்போது மற்றவர்கள், ’2 பீருக்கே மட்டையாகிவிட்டாயே, நாங்கள் எல்லாம் 5 பீர் கூட அசால்ட்டாக குடிப்போம்’ எனக் கூறினர்.

அப்போது ஒருவர் மணிகண்டனை தகாத வார்த்தையால் திட்டினார். இது மணிகண்டனுக்கு பெரும் அவமானத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. உடனே அவர் கையால் எங்களை தாக்கினார். இதனால், ‘எங்களையே அடிக்கிறாயா’ எனக்கேட்டு மணிகண்டனை தாக்கினோம். மணிகண்டன் ஜிம் மாஸ்டர் என்பதால் அவரும் எங்களை சரமாரியாக தாக்கினார்.

வலி தாங்க முடியாத ஆத்திரத்தில், கல்லால் அவரது நெற்றிப்பொட்டில் தாக்கினோம். மணிகண்டனின் தலை பகுதியிலும் கல்லால் பலமாக அடித்தோம். இதில் ரத்தம் வெளியாகி அவர் மயங்கி விழுந்தார். இதை தடுக்க வந்தவரையும் தாக்கினோம். சத்தம் கேட்டு இறுதிச் சடங்கிற்கு வந்தவர்கள் ஓடி வந்ததால் நாங்கள் பயந்து போய் அங்கிருந்து ஓடிவிட்டோம்” என தெரிவித்துள்ளனர்.

x