சுற்றுலா ரயில் பெட்டியில் சமையல் அடுப்பு, அடுப்புக் கரி: சுற்றுலா நிறுவன மேலாளர் கைது @ மதுரை


மதுரை: மதுரை - புனலூர் ரயிலில் இணைக்கப்பட்டிருந்த தனியார் சுற்றுலா ரயில் பெட்டியில், சமையலுக்கு பயன்படுத்தும் அடுப்புக்கரி, சமையல் அடுப்பு ஆகியவை நெல்லை ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.

தீ விபத்து அபாயத்தை தவிர்க்கும் வகையில் ரயிலில் எளிதில் தீப்பற்றக் கூடிய எரிவாயு சிலிண்டர், ஸ்டவ், மண்ணெண்ணெய், பெட்ரோல், அமிலங்கள் மற்றும் வெடிக்கும் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு தடை உள்ளது. இதை மீறுவோர் மீது 1989-ம் ஆண்டு ரயில்வே சட்டப் பிரிவுகள் 67, 164 மற்றும் 165 -ன் படி தண்டிக்கப்படுவர். இவற்றையும் மீறி மதுரை - புனலூர் ரயிலில் இணைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் சமையலுக்கு பயன்படுத்தும் அடுப்புக்கரி, சமையல் அடுப்பு ஆகியவை வைக்கப்பட்டிருந்தது.

இவை நேற்று அதிகாலை நெல்லை ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ராஜஸ்தானை சேர்ந்த தனியார் சுற்றுலா மேலாளர் சதீஷ் சந்தும் (64) கைது செய்யப்பட்டார். வடக்கு ரயில்வேயில் இருந்து வந்த இந்த சுற்றுலா ரயில் பெட்டியில் 59 பயணிகள் பயணித்தனர். மதுரையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26-ல் அதிகாலையில் சுற்றுலா ரயில் பெட்டியில் சமையலின்போது, தீப்பற்றி 9 பயணிகள் உயிரிழந்தனர். இதன் தொடர்ச்சியாக சுற்றுலா ரயில் பெட்டிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப் படுகிறது.

அப்படி நெல்லை ரயில் நிலையத்தில் நள்ளிரவில் திடீர் சோதனை நடத்திய வர்த்தக பிரிவு ஆய்வாளர் எம்.அரவிந்த், சமையலுக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த அடுப்புக்கரியை கண்டுபிடித்து பறிமுதல் செய்தார். சட்டப்பூர்வ மேல் நடவடிக்கைக்காக தனியார் சுற்றுலா மேலாளர் சதீஷ் சந்த் நெல்லை ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இது குறித்து மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது, “சுற்றுலா ரயில் பெட்டிகளை பதிவு செய்யும் போதே எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு சொல்லமாட்டோம் என, எழுத்துப்பூர்வ உறுதிமொழி வாங்கப்படுகிறது. இதையும் மீறி அபாயத்தை உணராமல் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக இது மாதிரியான சட்ட விரோத செயல்களில் ஒருசில சுற்றுலா நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ரயில் நிலையங்களில் பதாகைகள் அமைப்பது, அடிக்கடி பொது அறிவிப்புகள் செய்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், சக பயணிகள் யாராவது எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் வைத்திருந்தால், அது பற்றிய தகவல்களை உடனே ரயில்வே உதவி எண் 139 -க்கு தெரிவிக்கலாம். தீ விபத்துகளை தவிர்க்க ரயில்வே ஊழியர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பயணிகள் ரயில்களில் ஏற்றப்படும் சரக்குகளும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டே அனுப்பப்படுகின்றன” என்றனர்.

x