பிரதமர் மோடி தியானம் முதல் ட்ரம்ப் வழக்கு தீர்ப்பு வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


> விவேகானந்தர் பாறையில் மோடி தியானம்: கன்னியாகுமரி பகவதியம்மனை தரிசித்து, விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானத்தை பிரதமர் மோடி வியாழன் இரவு தொடங்கிய நிலையில் இரண்டாவது நாளாக இன்று அவர் தியானத்தைத் தொடர்ந்து வருகிறார். விவேகானந்தர் பாறையில் காவி உடை அணிந்து அவர் தியானத்தில் ஈடுபட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன. 2019 தேர்தல் பிரச்சாரத்திற்குப் பிறகு பிரதமர் மோடி கேதார்நாத் குகையில் இதேபோன்ற தியானப் பயிற்சியில் ஈடுபட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

> குடிநீர் தட்டுப்பாடு உச்ச நீதிமன்றத்தை நாடிய டெல்லி அரசு: தலைநகரில் நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் விவகாரத்தில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. டெல்லி அரசு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், அண்டை மாநிலங்களான ஹரியாணா, உத்தரப் பிரதேசம், இமாச்சலில் இருந்து கூடுதலாக நீர் திறக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் அரசியல் பாகுபாடுகளை புறந்தள்ளிவிட்டு பாஜகவினரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என முதல்வர் கேஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.

> ஹாசன் தொகுதி பிரஜ்வல் ரேவண்ணா கைது: பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நேற்று, அவர் தரப்பில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெர்மனியில் இருந்து லுஃப்தான்ஸா விமானம் LH0764 மூலம் நாடு திரும்பிய அவர் வியாழன் நள்ளிரவு கைது செய்யப்பட்டார். அவரைக் கைது செய்ய மூத்த பெண் ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் 5 பெண் காவலர்கள் கொண்ட பிரத்யேக குழுவை சிறப்பு புலனாய்வுக் குழு அனுப்பிவைத்தது.

> “அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள்” - கர்நாடக அமைச்சர்: பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வார்கள். மேலும் அதிகாரிகளுக்கு ரேவண்ணா ஒத்துழைத்ததாக தெரிகிறது” என கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.

> டெல்லி - அமெரிக்கா ஏர் இந்தியா விமானம் 24 மணி தாமதம்: தலைநகர் டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவுக்கு வியாழக்கிழமை அன்று செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் சுமார் 24 மணி நேரம் தாமதமானதாக பயணிகள் தெரிவித்தனர். இது குறித்து சமூக வலைதளங்களில் அவர்கள் பதிவிட்டனர். ஏசி இல்லாத சூழல், தரையில் காக்க வைக்கப்பட்ட நிலை, மயங்கிய நிலையில் பயணிகள் என அந்த பதிவுகளில் விமான நிறுவனத்தின் மீது பயணிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்

> நாடுமுழுவதும் வெப்ப அலைக்கு 41 பேர் உயிரிழப்பு: டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் 45 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், நாட்டின் கிழக்கு, வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே டெல்லி, ஹரியாணா, மற்றும் சண்டிகர் பகுதியில் வெள்ளிக்கிழமை (மே 31)யும் , மத்தியப் பிரதேசத்தில் மே 31 மற்றும் ஜூன் 1 தேதிகளுக்கு இடையிலும் புழுதிப்புயல் வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

> அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் குற்றவாளி என தீர்ப்பு: அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கடந்த 2016 தேர்தல் நிதியை முறைகேடாக கையாண்ட வழக்கில் குற்றவாளி என 12 ஜூரிகள் அடங்கிய குழு அறிவித்துள்ளது. சுமார் இரண்டு நாட்கள் நடந்த தீவிர ஆலோசனைக்கு பிறகு நியூயார்க் ஜூரிகள் இதனை அறிவித்தனர். இந்த வழக்கில் நீதிபதி ஜுவான் மெர்ச்சன், வரும் ஜூலை 11-ம் தேதி தண்டனை விவரங்களை அறிவிக்க உள்ளார். குற்ற வழக்கில் அமெரிக்க அதிபரோ அல்லது முன்னாள் அதிபரோ விசாரிக்கப்படுவது மற்றும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்படுவது அமெரிக்க அரசியல் வரலாற்றில் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

> மின்தடை இல்லாத மாநிலமான தமிழகம் - அரசு பெருமிதம்: மின்துறையில் செயல்படுத்தும் முனைப்பான திட்டங்களால் மின்தடையில்லாத மாநிலமாக தமிழகம் திகழ்வதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

> பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க ராமதாஸ் வலியுறுத்தல்: தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொளுத்தி வரும் கோடை வெயிலால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகளை திறப்பது நியாயமற்றது. இதனால் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

> ‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ ஏடிஎஸ்பி வெள்ளதுரை சஸ்பெண்ட்: ‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என அறியப்பட்ட ஏடிஎஸ்பி-யான வெள்ளதுரை இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காவல் உதவி ஆய்வாளராக தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்த வெள்ளதுரை, வீரப்பன் என்கவுன்டர் ஆபரேஷனிலும் பணியாற்றியவர். மேலும், 2003-ம் ஆண்டு சென்னையை கலக்கிய பிரபல தாதா அயோத்தி குப்பம் வீரமணி என்கவுன்டர் செய்யப்பட்டதிலும் முக்கிய பங்காற்றினார்.