மதுரவாயல் அருகே இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு


சாலை விபத்து

சென்னை: மதுரவாயல் அருகே, இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்துள்ளார்.

சென்னை மேற்கு முகப்பேர் கருமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் (58). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று ஜெய்சங்கர் பணி நிமித்தமாக தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

வானகரம் அருகே சென்றபோது பின்னால் வந்த ஆட்டோ, அவரது இருசக்கர வாகனம் மீது மோதியதில் ஜெய்சங்கர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெய்சங்கர் சிகிச்சை பலனின்றி இன்று (வியாழக்கிழமை) காலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு சென்ற ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகின்றனர்.