சிறுமிகளை வஞ்சித்து பாலியல் தொழில் அத்துமீறல் முதல் ‘All eyes on Rafah’ வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


> சென்னையில் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி கொடுமை: சென்னையில் சில தினங்களுக்கு முன் வளசரவாக்கம் பகுதியில் பாலியல் தொழில் நடத்தப்பட்டு வருவதாக சென்னை பாலியல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சைதாப்பேட்டையை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற 70 வயது முதியவர் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்து சிறுமியை மீட்டனர். கைதான ராமச்சந்திரனிடம் நடத்திய விசாரணையை அடுத்து சென்னையில் பள்ளி மாணவிகள், சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளியதாக தி.நகரைச் சேர்ந்த நதியா, அவருடைய சகோதரி சுமதி மற்றும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் என 8 பேரை போலீஸார் அடுத்தடுத்து கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பள்ளியில் படிக்கும் சிறுமிகளை குறிவைத்து பணத்தாசை காட்டி மூளைச்சலவை செய்து அவர்களை பாலியல் தொழிலில் தள்ளி, பின் அதனை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி அந்தச் சிறுமிகளை தொடர்ந்து பாலியல் தொழில் ஈடுபடுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுவரை 17 பள்ளிச் சிறுமிகள் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் தொழிலில் இக்கும்பல் தள்ளி அதன் மூலம் வட மாநில தொழிலதிபர்களுக்கு பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தி வந்ததும், ஒவ்வொரு சிறுமிக்கும் ரூபாய் 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் வரை கமிஷனாக பெற்றதும் தெரிய வந்தது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு வெளிநாட்டு விஐபி-கள் மூலம் பாலியல் தொல்லைகளை அளித்தார்களா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

> ஆவின் நிர்வாகம் அனுப்பிய காலாவதியான பிஸ்கெட் பாக்கெட்டுகள்: ஈரோடு ஆவினில் இருந்து கோபி பேருந்து நிலையம் மற்றும் கொடிவேரி பகுதியில் இயங்கும் ஆவின் பாலகங்களுக்கு செவ்வாய்க்கிழமை ஆவின் பிஸ்கெட் பாக்கெட்டுகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பிஸ்கெட்டுகள் அனைத்தும் காலாவதியானவை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

> “மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தை மோடி அழிக்கிறார்”: காந்தி திரைப்படம் மூலமாகவே மகாத்மா காந்தியை உலகம் தெரிந்து கொண்டது என்று கூறி இருப்பதன் மூலம் மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தை நரேந்திர மோடி அழிக்கிறார் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

> ஜூன் 1, 2 தேதிகளில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

> ‘கொதிக்கும்’ டெல்லியில் வரலாறு காணாத வெப்ப நிலை: தலைநகர் டெல்லியில் வரலாற்றில் இதுவரை இல்லாதவாறு 52.3 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் புதன்கிழமை அதிகபட்ச வெப்ப நிலை பதிவாகியுள்ளது.

> நவீன் பட்நாயக் உடல்நிலை: பிரதமர் மோடி சந்தேகம்: “கடந்த ஒரு வருடமாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. அவரால் எந்த ஒரு வேலையையும் சுயமாக செய்ய முடியாது என அவரோடு பணியாற்றுபவர்கள் கூறுகிறார்கள். இதற்குப் பின்னால் சதி இருக்குமோ என்றும் அவர்கள் சந்தேகிக்கிறார்கள்.

ஒடிசாவில் பாஜக வெற்றி பெற்றதும், ஒடிசாவைச் சேர்ந்த ஒருவரை நாங்கள் மாநிலத்தின் முதல்வராக்குவோம். அடுத்ததாக, நவீன் பட்நாயக்கின் உடல்நிலை குறித்து விசாரணை மேற்கொள்ள ஜூன் 10-க்குப் பிறகு ஒரு குழு அமைக்கப்படும். அந்தக் குழுவின் அறிக்கை பொதுமக்கள் முன்னிலையில் வெளியிடப்படும்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

> “கடவுள் கலவரத்தை தூண்டக் கூடாது” - மம்தா பானர்ஜி: கடவுள்தான் தன்னை அனுப்பி வைத்ததாக பிரதமர் மோடி அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், “நரேந்திர மோடி கடவுள் என்றால் அவர் அரசியலில் ஈடுபடக் கூடாது; கலவரத்தை தூண்டக் கூடாது” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மம்தா மேலும் கூறுகையில், "நாம் அவரு கோயில் கட்டுவோம். பிரசாதம், பூக்கள் போன்றவை வழங்குவோம். பல்வேறு பிரதமர்களுடன் பணியாற்றி உள்ளேன். ஆனால், இவரைப் போன்ற பிரதமரை நான் பார்த்தது இல்லை” என்று சாடியுள்ளார்.

> கேஜ்ரிவாலின் ஜாமீன் நீட்டிப்பு மனுவை விசாரிக்க மறுப்பு: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஜாமீன் நீட்டிப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. மேலும், ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யுமாறு தெரிவித்துள்ளது. முன்னதாக, அவருக்கு ஜூன் 1-ம் தேதி வரை உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி இருந்தது. இந்தச் சூழலில் அதனை நீட்டிக்க கோரி கேஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். மருத்துவக் காரணங்களுக்காக மேலும் 7 நாட்களுக்கு ஜாமீனை நீட்டிக்கும்படி அதில் கோரியிருந்தார்.

> மதவெறி பிடித்துள்ள பாஜக நாட்டுக்கு ஆபத்தானது” - ஜெயக்குமார்: “மதவெறி கொண்ட யானையை விட மதவெறி பிடித்துள்ள பாஜக நாட்டுக்கு ஆபத்தானது என்பது அண்ணாமலை போன்றோரின் பேச்சுகளில் இருந்து உணர முடிகிறது. ஒற்றுமையும் ஒருமைப்பாடும் மிக்க தேசத்தை துண்டாட நினைப்பதை விட்டுவிட்டு மக்கள் பிரச்சினைகளை பேசுவதே நாட்டின் நலம் என்பதை எத்தனை ஜென்மங்கள் கழித்து இந்த பாஜக உணரப் போகிறதோ?’ என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

> இஸ்ரேலுக்கு எதிராக ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்: ரஃபா தற்காலிக முகாம் மீது செவ்வாயன்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 37 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் உலகளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, “ஆல் ஐஸ் ஆன் ரஃபா” என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தற்போது ரஃபாவின் பக்கம் உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது.