‘மாயி’ பட இயக்குநர் சூர்ய பிரகாஷ் மறைவு: திரையுலகம் இரங்கல்


சென்னை: நடிகர் ராஜ்கிரண் நடித்து 1996-ம் ஆண்டு வெளியான படம் ‘மாணிக்கம்’. அம்மா கிரியேஷன்ஸ் தயாரித்த இதை இயக்கியவர் கே.வி.பாண்டி. அடுத்து சரத்குமார் நடித்த ‘மாயி’ படத்தை சூர்ய பிரகாஷ் என்ற பெயரில் இயக்கினார். தொடர்ந்து ‘திவான்’, ‘அதிபர்’, ‘வருசநாடு’, தெலுங்கில் ‘பரத் சிம்ஹா ரெட்டி’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அடுத்து சரத்குமார் நடிப்பில் புதிய படத்தை இயக்க இருந்தார்.

இந்நிலையில் இவருக்கு நேற்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டது. ஊரில் இருந்து வந்திருந்த மகளிடம் பேசிக்கொண்டிருந்தபோதே திடீரென தரையில் விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து அவர் சொந்த ஊரான வாடிப்பட்டி அருகிலுள்ள சின்னவாடி கிராமத்துக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச் சடங்கு நடந்தது. மறைந்த சூர்ய பிரகாஷுக்கு வயது 56. அவருக்கு மலர் என்ற மனைவி, சோனா என்ற மகள் உள்ளனர். சூர்ய பிரகாஷ் மறைவுக்கு நடிகர் சரத்குமார் உட்பட திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.