[X] Close

தமிழ்ப்படம் பத்தி சொல்லணும்னா..! வெண்ணிற ஆடை மூர்த்தி - 80


vennira-aadai-murthi-80-1

  • வி.ராம்ஜி
  • Posted: 12 Jul, 2018 13:14 pm
  • அ+ அ-

பூக்கடைக்கு விலாசம் எதற்கு என்பார்கள். பூக்களுக்கு மட்டும் அல்ல... நிறங்களுக்கும் முன்னுரையோ முகவரியோ தேவையில்லை. எப்போதும் பளீர் முகமும் ஜிலீர்ச் சிரிப்புமாக இருக்கும் வெண்ணிற ஆடை மூர்த்தி, எல்லோருக்கும் தெரிந்தவர்; எல்லோருக்கும் பிடித்தவர்.

மிக எளிமையாகவும் இனிமையாகவும் சமீபத்தில் இவருக்கு நடந்தது சதாபிஷேகம் எனும் எண்பதாம் கல்யாண வைபவம். ஆனால் மனிதர் அப்போது போலவேதான் இப்போதும் இருக்கிறார். அதுசரி...  மனசுக்கும் வயசுக்கும்தானே தொடர்பு உண்டு.

இந்த வேளையில்... வெண்ணிற ஆடை மூர்த்தியிடம் கேட்டதும் அவரிடம் இருந்து பதிலாகப் பெற்றதும் எண்பது. ஆமாம்... எண்பது கேள்விகள்... எண்பது பதில்கள்!

எட்டு எட்டாகவும் பிரித்துக்கொள்ளலாம். நாம் பத்துப்பத்தாகப் பிரித்துக்கொண்டு ரசிப்போம்.

1. உதவி இயக்குநர்கள் தொடங்கி சினிமாக்காரர்கள் பலரிடம் பேசும்போது, ‘மூர்த்தி சார் ரொம்ப ஜாலி டைப்’ என்கிறார்களே... இதென்ன மாயம்?

மாயமும் இல்ல, மந்திரமும் இல்ல, தந்திரமும் இல்ல. நாம நாமளா இருந்துட்டா, அடுத்தவங்க நம்மளை நல்லாவே ரசிப்பாங்க. இதுவரை 800க்கும் மேலே படங்கள் பண்ணிருக்கேன். வேலைன்னு வந்துட்டா அதுல இன்வால்மெண்ட், தேவைப்படும் போது பேசும் போது, யார்கிட்டயா இருந்தாலும் உண்மையா, அக்கறையா, மரியாதையா பேசுறது, மத்த நேரத்துல அமைதியோ அமைதி. இப்படி இருந்துட்டா, எல்லாருக்கும் நம்மளைப் பிடிக்கும். முக்கியமா, நம்மளை நமக்கேப் புடிச்சிப் போயிரும்! இதானே முக்கியம்.

 

2. சோ டைரக்ட் பண்ணினார். நாகேஷ் படம் இயக்கினார். நீங்க ஏன் படம் டைரக்ட் பண்ணலை?

அந்த அளவுக்கு நான் புத்திசாலின்னா பாத்துக்கோங்களேன். டைரக்ட் பண்றது ரொம்பக் கஷ்டமான வேலை. நடிக்கறது பார்ட்டைம் வேலை. நம்ம பார்ட்டை சரியாச் செஞ்சிட்டு, அடுத்த படத்துக்கு தடக்குன்னு ஓடிடலாம். ஆனா டைரக்‌ஷன்ங்கறது ஃபுல்டைம் ஜாப். ஷூட்டிங் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடிலேருந்தும் பின்னாடிலேருந்தும் டிஸ்கஷன், ஸ்கிரிப்ட், ரைட்டிங், லொகேஷன், ஷூட்டிங், எடிட்டிங், டப்பிங்னு ஓடிக்கிட்டே இருக்கணும். ஆனா நடிப்புன்னா, அதுக்குள்ளே அஞ்சு படங்கள் பண்ணிடலாம். இன்னொரு விஷயம்... எனக்கு நடிப்பு மட்டும்தான் தெரியும்.

ஆனாலும் ஒரு நப்பாசை இருந்துச்சு. கேரி ஆன் கிட்டுன்னு ஒரு டிராமா, களவுக்கலைன்னு டிடிக்காக ஒரு டிராமா. இன்னொரு டிராமாவை இந்து பத்திரிகைலதான் எடுத்தோம். அவங்கதான் அந்த சீரியல் பண்ணினாங்க.

3. தமிழ்ப்படம் பார்ட்1ல நடிச்சது பத்தி? இப்போ தமிழ்ப்படம் 2 ரிலிசாகியிருக்கே?

எத்தனையோ படங்கள், எத்தனையோ கேரக்டர்கள். அந்தந்தப் படத்துல, அப்படி அப்படியான கேரக்டர்களை உள்வாங்கி நடிச்சிக்கொடுத்துட்டு போயிகிட்டே இருப்போம். தமிழ்ப்படமும் அப்படியான நல்ல அனுபவங்களைக் கொடுத்துச்சு. நல்ல டைரக்டர், அற்புதமான டீம்.

அதேசமயம் ஒண்ணு சொல்லிக்க ஆசைப்படுறேன். எந்தத் தொழில்ல இருந்தாலும், அந்தத் தொழிலை கேலி பண்ணக்கூடாது. கிண்டல் செய்யக்கூடாது. இது என்னோட கருத்து.

4.  ஒருபேச்சுக்கு... ஒருவேளை இயக்குநர் ஸ்ரீதர் உங்களை ஹீரோவாக்கியிருந்தால்?

ஃபெயிலியராகியிருப்பேன். ஒரு உண்மை சொல்லட்டுங்களா? ஸ்ரீதர் சாரோட உதவியாளர் என்.சி.சக்ரவர்த்தி மூலமா ஸ்ரீதருக்கு முன்னாடி போய் நின்னேன். என்ன மாதிரி நடிக்கணும்னு ஆசைப்படுறேனு கேட்டார். காமெடின்னு சொன்னேன். அவர் சிரிச்சிட்டார். அவர் சிரிச்சது இருக்கட்டும்... உண்மையைச் சொன்னா நீங்களே சிரிப்பீங்க.

‘என்னப்பா மூக்கும் முழியுமா லட்சணமா இருக்கே. ஹீரோவா, செகண்ட் ஹீரோவா போடுறேம்பான்னாரு. வேணாம்னுட்டேன். உன் மூஞ்சி, நல்லாப் படிச்ச முகமா இருக்கு. காமெடி செட்டாகாதுய்யான்னார் ஸ்ரீதர் சார்.

நான் வரேன் சார்னு கிளம்பி, அவர் ரூம் கதவுக்கிட்ட போனேன். ஒருத்தனுக்கு அவனோட நல்ல முகம்தான் அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க. ஆனா எனக்கு என் நல்ல முகமே துரதிருஷ்டம் சார். பரவாயில்ல சார்னு சொன்னேன். இந்த வார்த்தைதான், எனக்கு வாய்ப்பு கொடுக்க, அதுவும் காமெடியனாவே வாய்ப்பு கொடுக்க, ஸ்ரீதர் சாரைத் தூண்டுச்சு.

5. டபுள் மீனிங் காமெடி?

தமிழ் செழிப்பான மொழி. ஒரு சொல்லுக்கு பல மாதிரியான அர்த்தங்கள் இருக்கு. சொல்லப்போனா ஒரு சொல்லுக்கு எட்டுவிதமான அர்த்தம் இருக்குன்னு சொல்லுவாங்க. ‘40 வருஷமா இந்த வேலைக்காரியை வைச்சிருக்கேன்னு ஒருத்தர் சொல்றார். இதை எப்படி வேணும்னாலும் எடுத்துக்கலாம். சென்சார் போர்டுல இருந்த லேடி ஒருத்தங்க, ‘சார், உங்க படத்துக்கு பத்து கட் கொடுத்திருக்குன்னு சொன்னாங்க. சரின்னேன். நீங்க ஒரு வக்கீலும் கூட. ஏன் சார் இதுமாதிரிலாம் பேசுறீங்கன்னு கேட்டாங்க. ஜன்னல்லேருந்து தெருவைப் பாக்கும் போது, நீங்க பாக்கறது ஒண்ணு; நான் பாக்கறது இன்னொண்ணு. ஒவ்வொருத்தரும் ஒவ்வொண்ணைப் பாப்பாங்க. இது ஜன்னல் கோளாறு இல்ல. நம்ம பார்வையோட சிக்கல்னு சொன்னேன்.

அதேசமயத்துல, நம்ம வாழ்க்கைல இதுமாதிரி போறபோக்குல நிறைய டபுள், டிரிபிள் மீனிங்லாம் பேசிக்கிட்டுதானே இருக்கோம்.

6. மனம் சோர்வடையும்போது என்ன செய்வீங்க?

தாங்க முடியாத சோகம், மீள முடியாத துக்கம்னெல்லாம் வந்ததில்ல. அப்படியொரு சோகமும் துக்கமும் யாருக்கும் எப்பவுமே நிரந்தரமும் இல்ல. இதை நான் முழுசா நம்பறேன்.

என்னடா இது சோகமா இருக்குன்னு இசை கேக்கறது, கடுமையா விறுவிறுன்னு வாக் போறது... இப்படிலாம் எதுவுமே பண்றதில்ல. இந்த மாதிரி தருணங்கள்ல, கொஞ்சம் அமைதியா இருந்தா... ஒரு அமானுஷ்யம் நடக்கும். உங்களைக் காப்பாத்தும். அது தெய்வ அனுக்கிரகம், அதிர்ஷ்டம், ஜாதக பலன் எப்படி வேணா வைச்சுக்கலாம். இந்த மாதிரி வரும்போது, நான் கடவுள்கிட்ட ஒப்படைச்சிருவேன். அவ்ளோதான்!

7. சினிமா உலகில், வாடா போடா நண்பர்கள்?

முதல்ல ஒரு விஷயம் சொல்லணும். இந்த வாடாபோடான்னு கூப்பிடுறதே எனக்குப் பிடிக்காது. ஏன்னா, எங்க அப்பா எங்களை அப்படிலாம் கூப்பிட்டதே இல்ல. அதேபோல, நானும் என் மகனை வாடா, என்னடா பண்றேன்னெல்லாம் பேசினதே கிடையாது.

எங்க அப்பாகிட்டருந்து கத்துக்கிட்டேன். அடுத்தாப்ல, சிலோன், சிங்கப்பூர்னு போயிருந்தப்ப, அங்கெல்லாம் குழந்தைகளை வாங்க போங்கன்னு மரியாதையோட பேசினதைப் பாத்தேன். குழந்தைங்களை தெய்வம்னு சொல்லிட்டு, நாம நாயேபேயேன்னு திட்டுறோம். ஆனா அங்கே அப்படியில்ல. இது என்னை ரொம்பவே இம்ப்ரஸ் பண்ணுச்சு.

இன்னொரு உண்மை சொல்றேன். இப்பதான் சதாபிஷேகம் நடந்துருக்கு. என் மனைவியை இதுவரை வாடிபோடின்னெல்லாம் சொன்னதே இல்ல. இத்தனைக்கும் எங்க சமூகத்துல அப்படிப் பேசுறதெல்லாம் ரொம்பவே சகஜம். இன்னிக்கி, பசங்களும் பொண்ணும் சர்வ சாதாரணமா அப்படிலாம் இஷ்டத்துக்குக் கூப்பிடுறாங்க. கலாச்சாரம், மாற்றம், புடலங்கா... என்னத்தச் சொல்றது.

நான், செட்ல இருக்கும்போது, யாரையும் மரியாதைக் குறைவா பேசினதே இல்ல. சின்னப்பையனா இருந்தாக்கூட, வாங்க தம்பின்னு சொல்லுவேன்.

சரி... அப்படி டா போட்டு பேசுற ரெண்டு நண்பர்கள் உண்டு. ‘என்னடா வாங்கபோங்கன்னு. அசிங்கமா இருக்கு. இனிமே டா போட்டுதான் பேசணும்னு முடிவுபண்ணினோம். அந்த நண்பர்கள், தேங்காய் சீனிவாசனும் சுருளிராஜனும்! அப்படியொரு ஆத்ம நண்பர்கள் எனக்கு.

8. டூயட் பாடிய அனுபவம்?

 எனக்கு எந்த அனுபவமும் இல்ல. டைரக்டருக்கும் டான்ஸ் மாஸ்டருக்கும்தான் மிகப்பெரிய அனுபவம். வாழ்க்கைல அப்படியொரு டான்ஸை அவங்க பாத்துருக்கவே மாட்டாங்க. ஒருதடவை, சுந்தரம் மாஸ்டர் கத்துக்கொடுக்கறாரு. மலைப்பகுதில, குளிர்காலத்துல ஷூட்டிங். காலெல்லாம் உறைஞ்சு போச்சு. எனக்கு டான்ஸே வரல. வேறவேற மாதிரி ஆடினேன். கோபமானவர், ஸ்ரீதர் சார்கிட்ட போய் புகார் வாசிச்சார். ‘என்னய்யா நீ. உன் அளவுக்கு டான்ஸ் பண்ணுவாரா அவரு. சின்னப்பையன், முத படம். அப்படித்தான் கூடக்குறைச்சி இருக்கும். அட்ஜஸ்ட் பண்ணு. டென்ஷனாகாதேன்னு சொன்னாரு. அதான் ஸ்ரீதர் சார்!

9. ஏன் மீசை வளர்க்கலை?

வளர்க்கணும், மீசை வைச்சுக்கணும்னெல்லாம் தோணலை. ஆம்பளைக்கு அழகு மீசைன்னு சொல்லுவாங்க. மீசை இல்லாட்டி அழகு இல்லையா, ஆம்பளைதான் கிடையாதா? மழமழன்னு மூஞ்சியை வைச்சிருந்தாத்தான், படத்துக்குப் படம் இஷ்டத்துக்கு மீசையை ஒட்டிக்கலாம். மீசை இல்லேன்னாத்தான் மீசையை ஒட்டிக்கறது ஈஸி. அதனால மீசையும் இல்ல; மீசை மேல ஆசையும் இல்ல!

10. உங்க 100வது படம்?

 சத்தியமா ஞாபகமே இல்ல சார். நீங்க கேக்கும்போதுதான், ஆமால்ல... நம்ம நூறாவது படம் என்னன்னு யோசனை போவுது. அப்படியே நடிச்சிட்டிருந்தாச்சு. தவிர, ஹீரோ, ஹீரோயின்னா, நூறாவது படம் முக்கியமா சொல்லுவாங்க. நாம காமெடியன் தானேன்னு அதையெல்லாம் புத்தில ஏத்திக்கலை.

- எண்பதில் பத்து போக... இன்னும் எவ்ளோ? தொடரும்

அடுத்து... 

அந்த ‘தம்ப்ப்ப்ரீ... எங்கே புடிச்சீங்க? 

நீங்கள் ரொம்பவே மிஸ் பண்ணும் நபர் யார்? 

வெண்ணிற ஆடை மூர்த்திக்குப் பிடித்த கலர்? 

நீங்கள் ரசித்த காமெடியன், அப்போது... இப்போது? 

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close