“நாளை பாஜக தலைமையகம் வருகிறோம்; முடிந்தால் கைது செய்க” - மோடிக்கு கேஜ்ரிவால் சவால்


புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என அனைத்து தலைவர்களுடன் நாளை (மே 19) நண்பகல் 12 மணிக்கு டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்துக்கு வர இருக்கிறோம், யாரைக் கைது செய்ய விருப்பமோ கைது செய்யலாம் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி எம்பி ஸ்வாதி மலிவாலை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ், பிபவ் குமார் இன்று கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள கேஜ்ரிவால், "ஆம் ஆத்மி கட்சியை பாஜக தொடர்ந்து குறிவைத்து வருகிறது. பாஜக தலைமையிலான மத்திய அரசு, ஆம் ஆத்மி தலைவர்கள் பலரை கைது செய்துள்ளது. மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டார். சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டார். நான் கைது செய்யப்பட்டேன். இன்று எனது தனி உதவியாளர் பிபவ் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படுவதற்கான அடுத்தப் பட்டியலில் ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சதா, அதிஷி மற்றும் சவுரப் பரத்வாஜ் ஆகியோர் உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியை நான் கேட்டுக்கொள்கிறேன், இந்த ஜெயில் விளையாட்டை நிறுத்துங்கள். நாளை மதியம் 12 மணிக்கு, நான் எனது தலைவர்கள் - எம்எல்ஏக்கள், எம்.பி.,கள் அனைவருடனும் பாஜக தலைமையகத்துக்கு வருகிறேன். நீங்கள் யாரை வேண்டுமானாலும் கைது செய்யுங்கள். சிறைக்குள் தள்ளுங்கள்

எங்களை ஏன் கைது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். நாம் என்ன தவறு செய்தோம்? நாம் செய்த குற்றம் அரசு பள்ளிகள், அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தியது. அவர்களால் இதைச் செய்ய முடியவில்லை. 24x7 மின்சாரம் கிடைக்கச் செய்தோம். அவர்களால் இதைச் செய்ய முடியாது. அதனால், ஆம் ஆத்மி கட்சியை நசுக்கப் பார்க்கிறார்கள்." என்று தெரிவித்துள்ளார்.

மதுபானக் கொள்கை ஊழல் வழக்குடன் தொடர்பான பணமோசடி வழக்கில் மார்ச் 21 அன்று கைது செய்யப்பட்ட கேஜ்ரிவால், தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜூன் 1-ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

x