ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளம்: 50 பேர் பலி, பலர் மாயம்


காபூல்: பருவ மழையினால் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் பலரை காணவில்லை. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோர் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை (மே 17) பெய்த பருவ மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மக்கள் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பலரை காணவில்லை என கோர் மாகாண ஆளுநரின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

கோர் மாகாணத்தின் தலைநகரான ஃபெரோஸ் கோ உட்பட மாகாணத்தின் பல பகுதிகளில் கொட்டித்தீர்த்த பருவ மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. நூற்றுக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்களும் சேதமடைந்துள்ளது, இதனால் அதிக இழப்புகள் ஏற்பட்டுள்ளது என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

மே 10 ஆம் தேதி பெய்த பெருமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி வடக்கு மாகாணமான பாக்லானில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்று கடந்த வாரம் ஐ.நா அமைப்பு அறிக்கை வெளியிட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் வெள்ளம் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது ஆப்கானிஸ்தானில் சோகத்தை உண்டாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.