திரைப்படங்களின் தலைப்பில் இளையராஜா ஓவியம்: பழநி ஓவிய ஆசிரியர் அசத்தல்


இளையராஜா இசையமைத்த திரைப்படங்களின் தலைப்பை வைத்து அவரது ஓவியத்தை வரைந்த ஆசிரியர் பா.அன்புசெல்வன்.

பழநி: இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி, அவர் இசையமைத்த தமிழ் திரைப்படங்களின் தலைப்பை வைத்து அவரது ஓவியத்தை பழநி ஓவிய ஆசிரியர் வரைந்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகேயுள்ள குபேரபட்டினத்தைச் சேர்ந்தவர் பா.அன்புசெல்வன். இவர் பா.சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

இவர் இன்று (ஜூன் 2) பிறந்தநாள் காணும் இளையராஜாவுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், அவர் இசையமைத்த அன்னக்கிளி முதல் விடுதலை திரைப்படம் வரையிலான ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள் மற்றும் ஆல்பங்களின் தலைப்பை வைத்து, அவரது முகத்தை ஓவியமாக வரைந்து அசத்தியுள்ளார். இது காண்போரை கவர்ந்து வருகிறது. இந்த ஓவியத்தை வரைய ஒரு வார காலமானதாக, அவர் கூறினார்.