“தென் மாவட்டங்களில் உளவியல் ரீதியாக அனைவர் மனதிலும் சாதி உள்ளது” - மாரி செல்வராஜ்


தூத்துக்குடி: “தென் மாவட்டங்களில் உளவியல் ரீதியாக அனைவர் மனதிலும் சாதி உள்ளது” என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் திரைப்பட இயக்குநர் மாரிசெல்வராஜ் கூறியது: “தற்போது பைசன் என்ற பெயரில் விளையாட்டை மையமாக வைத்து ஒரு படத்தை எடுத்து வருகிறேன். இதில் கதைக்களம் உண்மை சம்பவம் மற்றும் சில சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகும். சினிமாத்துறை நல்ல விஷயங்களுடன் ஆரோக்கியமாக உள்ளது.

தற்போது அனைவரும் வீட்டிலும் பூஜை அறை உள்ளது. ஆனாலும் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். அதேபோல் அனைவரும் ஒன்றிணைந்து படம் பார்ப்பது திரையரங்கில்தான். எனவே, ஓடிடியால் திரையரங்கிற்கு வரும் மக்களின் மனநிலை மாறாது.

தென் மாவட்டங்களில் உளவியல் ரீதியாக அனைவர் மனதிலும் சாதி உள்ளது. இதனை ஒரே நாளில் மாற்ற முடியாது. எல்லோரும் சேர்ந்து ஒன்றாக சேர்ந்து கலைத் துறை, அரசியல் உள்ளிட்டவற்றின் மூலம் அழுத்தமான வேலையை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அப்படி செய்தால் தான் அடுத்த தலைமுறையில் மாற்றம் வரும். புரிதலுக்கு உள்ளாகும். நடிகர் விஜய் மட்டுமல்ல, அனைவரும் அரசியலுக்கு வரலாம்” என்றார்.