சிரஞ்சீவியை சந்தித்தார் அஜித்குமார்


நடிகர் அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார். இதை ஆதிக்ரவிச்சந்திரன் இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நடந்து வருகிறது. அருகில் சிரஞ்சீவி நடிக்கும் ‘விஸ்வம்பரா’ படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இதில் த்ரிஷா, மீனாட்சி சவுத்ரி, சுரபி உட்பட பலர் நடிக்கின்றனர்.

ஷூட்டிங் இடைவேளையில் ‘விஸ்வம்பரா’ படப்பிடிப்பு தளத்துக்குச் சென்ற அஜித், சிரஞ்சீவியை சந்தித்து பேசினார். அந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ள சிரஞ்சீவி, “அஜித் நடித்த ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு படத்தின் பாடல் வெளியீட்டில் கலந்து கொண்டு கேசட்டை வெளியிட்டேன். அப்போது எப்படி பழகினாரோ, அதே போன்று இப்போதும் இருக்கிறார். அவரின் எளிமை கவர்ந்தது” என்று தெரிவித்துள்ளார்.