‘பூவே உனக்காக’ ரீமேக்: விஜய் கனிஷ்கா விருப்பம்


இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகும் படம், ‘ஹிட் லிஸ்ட்’. கே.எஸ்.ரவிகுமார் தனது ஆர்.கே.செல்லுலாய்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். சூரியகதிர் மற்றும் கார்த்திகேயன் இணைந்து இயக்கி இருக்கின்றனர். சரத்குமார், கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, அபிநட்சத்திரா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சத்யா இசை அமைத்துள்ளார். வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் இந்தப் படம் பற்றி விஜய் கனிஷ்கா கூறியதாவது:
சிறுவயதில் இருந்தே நடிப்பு ஆசை இருந்தது. என்ஜினீயரிங் முடித்துவிட்டு நடிப்பு தொடர்பான விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.

நடிப்பு, நடனம், ஆக்‌ஷன் எல்லாம் கற்றேன். ஒரு விழாவில் கே.எஸ்.ரவிகுமார் சாரை சந்தித்த என் அப்பா, என் மகன் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறான் என்றார். அப்போது அவர், ‘கூகுள் குட்டப்பா’ படத்தைத் தயாரித்து நடித்துக் கொண்டிருந்தார். என் தயாரிப்பு நிறுவனம் மூலம் நானே அறிமுகப்படுத்துகிறேன் என்றார். அப்படித்தான் இந்தப் படம் தொடங்கியது. எல்லா ஹீரோக்களுக்கும் முதல் படம் காதல் படமாகத்தான் இருக்கும். நான் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையில் அறிமுகமாகிறேன். ஆக்‌ஷன் கதை என்றாலும் யதார்த்தமாகவே இருக்கும். இதில் ஐடியில் வேலை பார்ப்பவனாக வருகிறேன்.

கதையில் காதல் இருக்காது. ஆனால், அடுத்தது என்ன என்கிற பரபரப்பை ஏற்படுத்தும். இது எந்தப் படத்தின் இன்ஸ்பிரேஷனும் இல்லை. ரஜினி, கமல்ஹாசன், விஜய், சூர்யா ஆகியோர் டிரெய்லர் பார்த்துவிட்டுப் பாராட்டினார்கள். ரஜினி சார், முதல் பட ஹீரோ மாதிரி தெரியவில்லை என்றார். சூர்யா சார் நிறைய அறிவுரை சொன்னார். அப்பா இயக்கிய படங்களில் ரீமேக் செய்வதென்றால் எதில் நடிப்பீர்கள்? என்று கேட்கிறார்கள். ‘பூவே உனக்காக’ ரிமேக்கில் நடிக்க ஆர்வம் இருக்கிறது. இவ்வாறு விஜய் கனிஷ்கா கூறினார்.