பிரதமர் மோடி பயோபிக்கில் நடிக்கவில்லை: சத்யராஜ்


விஜய் ஆண்டனி நடித்துள்ள படம், ‘மழை பிடிக்காத மனிதன்’. விஜய் மில்டன் இயக்கியுள்ள இதில், சத்யராஜ், சரத்குமார், மேகா ஆகாஷ் நடித்துள்ளனர். இதன் டீஸர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் சத்யராஜ் பேசும்போது கூறியதாவது:

‘லூட்டி’ படத்தில் கிராபிக்ஸ் மூலம் நானும் எம்.ஜி.ஆரும் சந்திப்பது போல காட்சி வரும். எம்.ஜி.ஆருக்கு பலர் டப்பிங் பேசி பார்த்தும் சரியாக வரவில்லை. பிறகு என்னை பேசச் சொன்னார்கள். நான் எம்.ஜி.ஆருக்கு பேசினேன். அவருக்கு டப்பிங் பேசியது, நான் ஒருவனாகத்தான் இருப்பேன். அந்தப் பெருமை எனக்கு உண்டு. சிவாஜி நடிக்க ஆசைப்பட்டு கிடைக்காதது , தந்தை பெரியார் கேரக்டர்தான். அதில் நடித்த பெருமையும் எனக்கு உண்டு. இந்தப் படத்தில், என் நண்பர் விஜயகாந்த் நடிக்க இருந்த கேரக்டரில் நான் நடித்திருக்கிறேன். இதுவும் பெருமையான விஷயம்” என்றார்.

அவரிடம், பிரதமர் மோடி பயோபிக்கில் நடிப்பதாகச் செய்தி வெளியானது பற்றி கேட்டதற்கு, “யாரும் என்னிடம் கேட்கவில்லை. அப்படியே நடித்தாலும் என் நண்பன் மறைந்த மணிவண்ணன் இயக்கினால் உள்ளதை உள்ளபடி எடுப்பார். வெற்றிமாறன், பா.ரஞ்சித் மாதிரி இயக்குநர்கள் எடுத்தாலும் மோடி பயோபிக் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்றார்.