“கடவுள்தான் என்னை பூமிக்கு அனுப்பினார்!” - பிரதமர் மோடி ‘வைரல்’ பதில்


வாராணசி: “நான் பயோலாஜிக்கலாக பிறக்கவில்லை, நான் அந்த பரமாத்மாவால் பூமிக்கு அனுப்பப்பட்டேன்” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்துக்கு இடையே தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடியிடம், நிருபர் 'உங்களின் அதீத ஆற்றலுக்கு என்ன காரணம்' எனக் கேள்வி கேட்க, அதற்கு பதில் கொடுத்த பிரதமர் மோடி, “எனது அம்மா உயிருடன் இருந்தவரை அவர் மூலமாக நான் பிறந்து பூமிக்கு வந்தேன் என்று நினைத்தேன். அம்மாவின் மரணத்துக்கு பிறகே பலவற்றை சிந்தித்து பார்க்கிறேன். அதனை நான் ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். மற்றவர்கள் நான் ஏற்றுக்கொள்வதற்கு எதிராக இருக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தறவரை அவற்றை முழுமையாக நம்புகிறேன்.

நான் பயோலாஜிக்கல் ரீதியாக பிறக்கவில்லை. நான் அந்த பரமாத்மாவால் பூமிக்கு அனுப்பப்பட்டேன். ஏதோ ஒரு விஷயம் நடக்க வேண்டும் என்பதற்காக கடவுள் என்னை பூமிக்கு அனுப்பியுள்ளார். நான் பெற்றுள்ள ஆற்றல் சாதாரண மனிதர் பெற்றிருக்கும் ஆற்றல் கிடையாது. கடவுளால் மட்டுமே இத்தகைய ஆற்றலை கொடுக்க முடியும்” என்று கூறியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.