மிக கனமழை எச்சரிக்கை முதல் அமித் ஷாவை சாடிய ப.சிதம்பரம் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


> உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வரும் 24-ஆம் தேதி காலைக்குள் வடகிழக்கு நோக்கி நகர்ந்து, மத்திய வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் (மே.22, 23) கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

> புனே சிறுவன் 25 வயது வரை வாகனம் ஓட்ட தடை: கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுபோதையில் சொகுசு காரை வேகமாக ஓட்டி இருவரது உயிரிழப்புக்கு காரணமான 17 வயது சிறுவன், அவரது 25-வது வயது வரை வாகனம் ஓட்டக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மகாராஷ்டிரா போக்குவரத்து ஆணையர் விவேக் பிமான்வார் பிறப்பித்துள்ளார்.

> கேஜ்ரிவால், ராகுல் குறித்து ஆம் ஆத்மி எம்பி கருத்து: ஆம் ஆத்மி கட்சி எம்.பி., ராகவ் சந்தா, டெல்லியில் நடைபெற இருக்கும் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிால் காங்கிரஸ் கட்சிக்கும், ராகுல் காந்தி ஆம் ஆத்மி கட்சிக்கும் வாக்களிப்பர் என்று தெரிவித்துள்ளார். கண் அறுவை சிகிச்சைக்கு பின்பு இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பிய அவர் தான் பங்கேற்ற 2024ம் ஆண்டு தேர்தலுக்கான முதல் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

> போஜ்புரி பாடகர் பாஜகவில் இருந்து நீக்கம்: 2024 மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து பிஹாரின் கராகட் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டதற்காக போஜ்புரி பாடகரும், அரசியல்வாதியுமான பவன் சிங்-ஐ மாநில பாஜக புதன்கிழமை கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறது.

> அமித் ஷாவை விமர்சித்த ப.சிதம்பரம்: "வயது மூப்பு காரணமாக நவீன் பட்னாயக் ஓய்வு பெற வேண்டும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஒருவேளை பாஜக ஆட்சியமைந்தால் நரேந்திர மோடிக்கு ஒரு குறிப்பைக் கொடுத்துள்ளார்" என்று காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ப.சிதம்ரம் அமித் ஷா வை விமர்சித்துள்ளார். மேலும், அவர் "பாஜக ஆட்சி அமைக்கவில்லை என்றால் அமித் ஷா மிகவும் மகிழ்வார் என்பது தெரிகிறது. ஏனெனில் எதிர்க்கட்சி தலைவர் இருக்கையில் மோடித்து பதில் அவர் அமர்ந்திருப்பார்" என்று தெரிவித்தார்.

> மன்னிப்பு கோரிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிஇஓ: லண்டனில் இருந்து சிங்கப்பூருக்குச் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக ஒருவர் பலியாகி, 70 பேர் காயம் அடைந்தது தொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தலைமை செயல் அதிகாரி வெளிப்படையாக மன்னிப்புகோரியுள்ளார்.

> மீண்டும் தொடங்கிய மலை ரயில் சேவை: கனமழையால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக கடந்த 4 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் போக்குவரத்து இன்று (மே 22) மீண்டும் தொடங்கியது.

> திருச்செந்தூரில் வைகாசி விசாகத் திருவிழா: வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (மே.22) அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

> உலக பாரா தடகள சாம்பியன்ஷிபில் தங்கம் வென்ற மாரியப்பன்: நடப்பு உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றுள்ளார் மாரியப்பன் தங்கவேலு. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் அரங்கில் அவர் வென்றுள்ள முதல் தங்கம் இது. இந்த தொடரில் இதுவரை இந்தியா மொத்தம் நான்கு தங்கம் வென்றுள்ளது.

> தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு 6-ம் ஆண்டு நினைவு தினம்: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் 6-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (புதன்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு அமைச்சர் பெ.கீதாஜீவன் மற்றும் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.