காதலியை மடியில் வைத்து பைக் சாகசம் காட்டிய இளைஞர் கைது @ பெங்களூரு


பெங்களூரு: பெங்களூருவில் உள்ள சர்வதேச விமான நிலைய சாலையில் தனது காதலியை மடியில் வைத்துக் கொண்டு பைக் ஓட்டி சாகசம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மே 17-ம் தேதி நடந்த இந்த சாகச நிகழ்வு குறித்த வீடியோ வைரலாகி வெளிச்சத்துக்கு வந்தநிலையில், பெங்களூரு போலீஸார் அந்த இளைஞரை கைது செய்தனர். அந்த வீடியோவை பெங்களூரு போலீஸார் தங்களின் எக்ஸ் பக்கத்திலும் பகிர்ந்துள்ளனர். வீடியோவில், தனது காதலியை கவர்வதற்காக இளைஞர் ஒருவர் அவரைத் தனது மடியில் வைத்துக்கொண்டு சாலையில் பைக் ஓட்டிச்செல்கிறார். இருவரும் ஹெல்மெட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோவின் முடிவில் "பெங்களூரு என்பது போற்றுதலுக்குரிய இடம், குழம்பம் விளைவிப்பதற்கான இடமில்லை" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

இந்த வீடியோவுக்கான பதிவில், "ஹே.. சாகச விரும்பிகளே.. சாலை என்பது சண்டைக்காட்சிகள், சாகசங்களை அரங்கேற்றுவதற்கான மேடை இடம் இல்லை. நீங்கள் உட்பட அனைவரையும் பாதுகாப்பாக அழைத்துச் செல்லுங்கள். பொறுப்புடன் பயணிப்போம்" என்று தெரிவித்துள்ளனர்.

போலீஸாரின் இந்த வீடியோ 22 ஆயிரம் பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும், பல பயனர்கள் போலீஸாரின் செயலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். என்றாலும் சில சமூக ஊடக பயனர்கள் அந்தப் பெண்ணும் கைது செய்யப்பட வேண்டும் என்று கருத்திட்டுள்ளனர். பயனர் ஒருவர், "அந்த பெண் ஏன் கைது செய்யப்படவில்லை. அவரையும் கைது செய்யுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு பயனர். "அந்தப் பெண் என்னவானார். துரதிருஷ்டவசமாக சட்டம் ஆண்களை மட்டுமே குறிவைக்கிறது" என்று தெரிவித்துள்ளார். இன்னுமொரு பயனர், "சிறந்த விரைவான நடவடிக்கை... பெரிதும் போற்றுதலுக்குரியது, அந்த இருவரும் தாமதமின்றி அடுத்த சிக்னலில் பிடிக்கப்பட்டிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.