‘பாதல் பர்சா பிஜூலி’ பாடல் மீண்டும் வைரல்: நேபாள சிறுவன் செய்தது என்ன?


கடந்த ஆண்டு இணைவாசிகளால் வெறித்தனமாக கொண்டாடப்பட்ட ‘பாதல் பர்சா பிஜூலி’ என்ற நேபாளி பாடல், அந்நாட்டு சிறுவன் ஒருவனால் மீண்டும் வைரலாகி வருகிறது. அந்தப் பிரபலமான பாடலின் வரிகளை சிறுவன் தனது குரலில் பாடும் அழகு இணையத்தில் 5 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.

ani5h_7 என்ற இன்ஸ்டாகிராம் முகவரியில் இருந்து பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவுக்கு ‘பாதல் பர்சா பிஜூலி’ என்றே தலைப்பிடப்பட்டுள்ளது. சிறுவனின் அந்தப் பாடல் வீடியோ நேபாளத்தின் அழகிய நகரமான மனாங்க்-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீடியோவில், பச்சை புல் மெத்தைக்கு நடுவில், வண்ணக் கண் கொண்டு பூக்கள் எட்டிப் பார்த்து காட்சிக்கு அழகு சேர்க்க, அதனை தரிசித்து விட்டும் போகும் விதமாக மஞ்சுகள் (மேகம்) ஊர்வலம் செல்லும் பின்னணியில் பூக்கூட்டங்களுக்கு மத்தியில் தானும் ஒற்றைப் பூவாய் அமர்ந்து, காட்சியின் ரம்யத்தை தன் மழலைக் குரலில் ‘பாதல் பர்சா பிஜூலி’யாக மொழிபெயர்க்கிறான் சிறுவன்.

மனாங்கின் அழகும், பாடும் சிறுவனின் பாவனைகளும் இணையத்தில் 5 லட்சம் பார்வையாளர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டுள்ளது. சிறுவனின் குரலையும் அவன் இருக்கும் சூழலையும் இணைவாசிகள் கொண்டாடித் தீர்த்துள்ளனர். ஒரு பயனர் "அவன் சொர்க்கத்தில் வசிக்கிறான்" என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பயனர், "சொர்க்கத்தில் இருக்கும் தேவதை டரெண்டிங் பாடலை பாடுகிறது" என்று பதிவிட்டுள்ளார். இன்னுமொரு பயனர், "சொர்க்கத்தில் அமர்ந்து கொண்டு பாடும் சிறுவன் நமக்கு அந்த வீடியோவை நமக்கு அனுப்பியுள்ளான்" என்று தெரிவித்துள்ளார். மற்றுமொரு பயனர், "அவன் எவ்வளவு அழகு" என்று ஆச்சரியம் பகிர்ந்துள்ளார்.

இதே சிறுவன், தனது பள்ளியில் நடந்த விழா ஒன்றில் மேடையில் இதே ‘பாதல் பர்சா பிஜூலி’ பாடலுக்கு நடமாடிய வீடியோ கடந்த ஆண்டு வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவில், சிறுவன் மேடையில் ஆடும் ஒவ்வொரு அசைவுக்கும் கீழே இருந்த அவனது நண்பர்கள் உற்சாகப்படுத்தி, வாழ்த்தியிருப்பர்.

பாதல் பர்சா பிஜூலி பாடல் கடந்த ஆண்டு இணையத்தை கலக்கி எடுத்த வைரலான பாடலில் ஒன்று, இதன் கொண்டாட்டத்தில் அனுபமா நடிகை ரூபாலி கங்குலி உள்ளிட்டோரும் இணைந்திருந்தனர்.