குற்றாலம் வெள்ளத்தில் சிக்கியவர்களை உயிரை பணயம் வைத்து மீட்ட சக சுற்றுலா பயணிகள்


தென்காசி: பழைய குற்றாலத்தில் நேற்று முன்தினம் திடீரென காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதும் அருவியில் குளித்துக்கொண்டு இருந்த சுற்றுலாப் பயணிகள் பதற்றத்துடன் வெளியேறினர். அருவிக்கரை ஓரம் உள்ள உடை மாற்றும் அறைகள் மற்றும் மேடான பகுதிக்கு ஏராளமானோர் ஓடிச் சென்று உயிர் தப்பினர்.

அருவிக்கு செல்லும் வழியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அருவியில் குளித்த சுற்றுலாப் பயணிகள் சிலர் அந்த வழியாக வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர். அருவி நீர் செல்லும் கால்வாயையொட்டி இந்த பாதை அமைந்துள்ளது. இந்த பாதையில் இருந்து சுமார் 50 அடி பள்ளத்தில் கால்வாய் அமைந்துள்ளது. அதில் தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கம்பிகளை பிடித்துக்கொண்டு அவர்கள் பதற்றத்தில் கூச்சலிட்டனர்.

உடனடியாக சக சுற்றுலாப் பயணிகள் உயிரை பணயம் வைத்து அவர்களை மீட்டனர். இந்த காட்சிகளை சகபயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மீட்பு பணியில் ஈடுபட்டவர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.