முதுமலையில் புலியை விரட்டிய யானை - வீடியோ வைரல்


புலியை விரட்டிய யானை

முதுமலை: முதுமலையில் புலியை யானை விரட்டிய காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தமிழக - கர்நாடக எல்லையில் உள்ளது. தமிழக பகுதியில் முதுமலை புலிகள் காப்பகமும், கர்நாடக பகுதியில் பந்திப்பூர் புலிகள் காப்பகம் உள்ளது.

இந்நிலையில், நேற்று முதுமலை - கர்நாடக எல்லையோரமான மசினகுடி வனப்பகுதியில் உள்ள குளத்தில் புலி ஒன்று தண்ணீரில் படுத்து கிடந்தது. அப்போது குளத்தில் தண்ணீர் அருந்த வந்த காட்டு யானை, புலியை கண்டதும் ஆத்திரமடைந்து பிளிறியவாறு விரட்டியது. இதனால் புலி குளத்திலிருந்து வெளியேறி அடர்ந்த புதருக்குள் சென்று பதுங்கியது. காட்டு யானையும் தொடர்ந்து விரட்டியவாறு வந்ததால் புலி புதருக்குள் இருந்து வெளியே வரவில்லை.

பின்னர் காட்டு யானை அங்கிருந்து சென்றது. அதன் பின்னர் மெதுவாக புலி மீண்டும் குளத்துக்கு வந்து தண்ணீரில் படுத்து கிடந்தது. இந்தக் காட்சியை கர்நாடக வனத்துறையினர் வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ காட்சி வேகமாக பரவி வருகிறது.