“திமுகவின் சமூகநலத் திட்டங்களை மக்கள் அங்கீகரித்ததே இந்த வெற்றிக்கு காரணம்” - ஆ.ராசா @ நீலகிரி


ஆ.ராசா | கோப்புப் படம்

உதகை: திமுகவின் சமூக நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை அங்கீகரித்து தமிழக மக்கள் இந்த வெற்றியை வழங்கி இருக்கின்றனர் என நீலகிரியில் வெற்றிபெற்ற பின் ஆ.ராசா தெரிவித்தார்.

நீலகிரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆ.ராசா வெற்றி பெற்று மூன்றாவது முறையாக நீலகிரி எம்பி ஆக பதவி ஏற்க இருக்கிறார்.

இந்நிலையில், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்ற பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றது. இந்தியாவின் நம்பர் 1 முதலமைச்சர் என்று பெயர் எடுத்துக் கொண்டிருக்கின்ற ஸ்டாலின் ஆட்சியில் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை தமிழக மக்கள் அங்கீகரித்து இந்த வெற்றியை வழங்கி இருக்கின்றனர்.

எப்போதெல்லாம் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்துக்கு ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் பேரறிஞர் அண்ணா காலம் தொட்டு, கலைஞர் காலம் தொட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் சட்டத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

இந்த முறை அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிற மதச்சார்பின்மைக்கு ஆபத்து வரும் என எச்சரித்து அரசியல் சட்டத்தை காப்பாற்ற 40 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்யுங்கள் என்ற அறை கூவலை தமிழ்நாட்டு மக்கள் ஏற்று இருக்கின்றனர்.

இதையடுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலினின் உழைப்பை மக்கள் அங்கீகரித்தனர். அதனால் இந்த வெற்றி கிடைத்துள்ளது.

நீலகிரி தொகுதியில் நான் கடந்த காலங்களில் ஆற்றிய பணிகளை மக்கள் அங்கீகரித்துள்ளனர். மேலும், தொகுதி மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற உறுதியையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு ஆ.ராசா தெரிவித்தார்.

பாஜக இரண்டாம் இடம் பிடித்துள்ளது குறித்த கேள்விக்கு தான் அதை பார்க்கவில்லை என பதிலளித்தார்.