பண்ருட்டியில் குப்பைகளை கையாளுவதில் நகராட்சி அலட்சியம்!


பண்ருட்டி கெடிலம் ஆற்றின் கரையோரம் சலவைத் தொழிலாளர்கள் உலர வைத்துள்ள ஆடைகள் அருகே கொட்டிவைக்கப்பட்டுள்ள குப்பைகள்

கடலூர்: பண்ருட்டியில் குப்பைகளை கையாளுவதில் நகராட்சி நிர்வாகம் அலட்சியத்தோடு செயல்படுவதால் சாலைகளில் குப்பைகள் தேங்கியும், சேகரிக்கப்படும் குப்பைகளை கெடிலம் ஆற்றில் மாசு ஏற்படுத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் 33 வார்டுகளைக் கொண்ட பண்ருட்டியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் மூலம் குப்பைகள் அப்புறப்படுத்தப்படுகிறது. 94 துப்புரவு பணியாளர்களைக் கொண்ட இந்த நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் மூலம் வீடு வீடாக சென்று, மக்கும் குப்பை, மக்காத குப்பை சேகரிக்கப்படுகிறது என்று கூறப்பட்டாலும், அவ்வாறு சேகரிக்கப்படுவதில்லை என நகர குடியிருப்பு வாசிகள் கூறுகின்றனர்.
துப்புரவு பணியாளர்களைப் பொறுத்தவரை மார்க்கெட் பகுதியில் மட்டுமே குப்பைகளை சேகரித்து, அவற்றை முறையாக தரம் பிரிக்காமல், அப்படியே கெடிலம் ஆற்றில் கொட்டி எரித்து விடுகின்றனராம்.

இது தவிர நகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி எல்லையை ஒட்டியுள்ள சிறவத்தூர் ஊராட்சியில் கொட்டி எரிப்பதால், சிறுவத்தூர் ஊராட்சி மக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுவதாக, அவ்வூராட்சி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதே போன்று 30-வது வார்டில் குப்பைகளை காலி மனைகளில் கொட்டி விட்டுச் செல்வதால், அருகேவுள்ள குடியிருப்பு வாசிகள் குப்பைகளை கொட்டக் கூடாது எனக் கூறினால்,
அந்தக் குடியிருப்பு வாசிகளிடம் கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு தான் குப்பைகளை அள்ளுகின்றனராம் துப்புரவு பணியாளர்கள்.

பண்ருட்டி 30-வது வார்டில் குடியிருப்புகளின் நடுவே காலி மனைகளில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள்

அதே வீதியில் வசிக்கும் கவுன்சிலர் சாலையில் கட்டுமானப் பொருட்களை கொட்டி வைத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும் அப்பகுதி குற்றம்சாட்டு குடியிருப்பு வாசிகள், நகரில் தேங்கும் குப்பைகளை அப்புறப்படுவத்துவதில்லை எனவும், இதனால் துர் நாற்றமும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கவலைத் தெரிவித்தனர். இது தவிர பண்ருட்டி கெடிலம் ஆற்றை ஒட்டியப் பகுதியில் குப்பைகள் தரம் பிரிக்கும் பணி நடைபெறுகிறது. அதற்கு அருகே சலவைத் தொழிலாளிகளின் உலர் களமும் உள்ளது.

குப்பைகளை தரம்பிரிக்கும் இயந்திரம் இயங்கும் போது,சலவைத் தொழிளாளர்கள் உலர வைத்துள்ள துணிகளில் குப்பைகளின் புழுதி படர்ந்து, அவர்களின் தொழிலும் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டினர். இது தொடர்பாக பண்ருட்டி நகர சுகாதார ஆய்வாளர் முருகேசனிடம் கேட்டபோது, இப்புகார்கள் தனது கவனத்திற்கு வரவில்லை எனவும் களத்தை ஆய்வு செய்துவிட்டு பதில் அளிப்பதாகத் தெரிவித்தார்.

x