வயிற்றில் பஞ்சு ரோல் வைத்து தைத்த விவகாரம்; பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு


மதுரை: வயிற்று வலி சிகிச்சைக்கு வந்த பெண்ணின் கர்ப்பப்பையை அனுமதியில்லாமல் அகற்றியதுடன், வயிற்றில் பஞ்சு ரோல் வைத்து தைத்தற்காக ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க மாநில நுகர்வோர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை கல்பாளையத்தான்பட்டியைச் சேர்ந்த 30 வயது பெண் தொடர் வயிற்று வலிக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கடந்த 2016 மார்ச் 15-ல் சிகிச்சைக்கு சென்றார்.

அங்கு கர்ப்பப்பையில் நீர்கட்டி இருப்பதாகக் கூறி அறுவை சிகிச்சை செய்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகும் அவருக்கு வயிற்று வலி குறையவில்லை.

இதனால் பெண்ணை உறவினர்கள் திருச்சி பெல்மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது வயிற்றில் பஞ்சுரோல் இருப்பது தெரியவந்தது.

மீண்டும் அறுவை சிகிச்சை: அறுவை சிகிச்சை முடிந்து வயிற்றுப் பகுதியை தைக்கும் போது பஞ்சு ரோலை உள்ளே வைத்து தைத்துள்ளனர். மேலும் பெண்ணின் சம்மதம் இல்லாமல் கருப்பையும் அகற்றப்பட்டது தெரியவந்தது. பின்னர் மீண்டும் அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த பஞ்சு ரோல் அகற்றப்பட்டது.

இதையடுத்து அப்பெண் சார்பில் தனியார் மருத்துவமனை நிர்வாகம் ரூ. 99 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி மதுரையில் உள்ள மாநில நுகர்வோர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி கருப்பையா விசாரித்து பிறப்பித்த உத்தரவு: தனியார் மருத்துவர்கள் அலட்சியமாக சிகிச்சை அளித்ததுடன், கவனக்குறைவாக நோயாளியின் வயிற்றில் பஞ்சு ரோலை வைத்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டது உறுதிபடுத்தப்பட்டுஉள்ளது.

இதனால் மனுதாரரின் தாயாருக்கு ஒரு மாதத்தில் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தவறினால் இழப்பீட்டுத் தொகைக்கு ஆண்டுக்கு 6 சதவீத வட்டி வழங்க வேண்டும், என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

x