சென்னை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
‘பிளாஸ்டிக் பேக்கேஜிங்’ தொடர்பான விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு இணையதளம் (இபிஆர்) குறித்த வழிகாட்டுதல்களை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 2022 பிப்ரவரியில் வெளியிட்டுள்ளது.
அதன்படி, உற்பத்தியாளர், இறக்குமதியாளர், பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வோர், அதில் இருந்து எரிபொருள் எண்ணெய் எடுப்போர், இணை செயலாக்க சிமென்ட் தொழிற்சாலைகள் ஆகியோர் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உருவாக்கிய இபிஆர் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
எனவே, மத்திய வாரியம் அறிவுறுத்தியபடி, மேற்கண்ட அனைத்து தரப்பினரும் இணையதளத்தில் மே 31-ம் தேதிக்குள் முழு விவரங்களுடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், நடவடிக்கை எடுக்கப்படும்.
தவிர, இணையதளத்தில் தங்கள் ஆண்டு அறிக்கையையும் மே 31-ம் தேதிக்கு முன்பு தாக்கல் செய்ய வேண்டும். இதுதொடர்பான கேள்விகள், சந்தேகங்களுக்கு 9500076438 என்ற செல்போன் எண் அல்லது pwmsec@tnpcb.gov.in என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.