முல்லை பெரியாறு அணையை இடித்தால் கேரளாவுக்கு பொருளாதார தடையை ஏற்படுத்துவோம்: தேனி போராட்டத்தில் விவசாயிகள் எச்சரிக்கை


முல்லை பெரியாறு பகுதியில் கேரளா அரசின் புதிய அணைக்கட்டும் முயற்சியை கண்டித்து தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பகுதியில் பூஜை செய்து பேரணியை துவங்கி, குமுளி நோக்கி பேரணியாக சென்று முற்றுகைப் போராட்டம் செய்ய முயன்ற விவசாயிகள். படம் நா. தங்க ரத்தினம்.

குமுளி: முல்லை பெரியாறு அணையை இடித்தால், கேரளாவுக்கு பால்,காய்கறி உள்ளிட்ட எந்த பொருளையும் கொண்டுசெல்லவிடாமல் தடுத்து அந்த மாநிலத்துக்கு பொருளாதாரத் தடையை ஏற்படுத்துவோம், என்று லோயர் கேம்ப்பில் நடந்த போராட்டத்தில் விவசாயிகள் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்ட அனுமதி கேட்டு, கேரளஅரசு கடந்த ஜனவரியில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் மனு அளித்துள்ளது. கேரளாவின் இந்த நடவடிக்கை தமிழக விவசாயிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சியினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, தேனி மாவட்டத்தின் தமிழக - கேரள எல்லையில் பல்வேறு விவசாய அமைப்புகள் சார்பில், முல்லை பெரியாறு அணையை நோக்கி நேற்று கண்டன பேரணி நடைபெற்றது.

பெரியாறு-வைகை பாசனவிவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கம் தலைமைவகித்தார். தலைவர் பொன்காட்சிகண்ணன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கூடலூர் நகரத் தலைவர் ராஜீவ், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் முருகதாஸ், சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சாலையில் சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபட்ட பின்னர் பேரணி தொடங்கியது. லோயர் கேம்ப்பில் தொடங்கிய இப்பேரணி, கர்னல் ஜான் பென்னிகுவிக் மணிமண்டபம் வரை சென்றது. தொடர்ந்து, கேரளாவுக்குள் நுழைய முயன்ற விவசாயிகளை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அங்கேயே விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பேபி அணையை பலப்படுத்த வேண்டும். முல்லைபெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகளை முறையாக அளவீடு செய்ய வேண்டும். நீர்மட்டத்தை உயர்த்த உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: முல்லை பெரியாறை இடிக்க கேரளஅரசு தொடர்ந்து அவதூறு பரப்பிவருகிறது. இந்நிலை நீடித்தால் 2011-ம் ஆண்டை போல மீண்டும்போராட்டம் தீவிரமடையும். 10 லட்சம் விவசாயிகள், ஒரு கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாக முல்லைபெரியாறு அணை உள்ளது. இதை அழிக்கவிடமாட்டோம். பால், காய்கறி, சிமென்ட் உள்ளிட்டஅனைத்தும் தமிழகத்தில் இருந்துதான் கேரளாவுக்கு செல்கிறது.அணையை இடித்தால் இப்பொருட்களை கொண்டு செல்லவிடாமல் தடுத்து, பொருளாதாரத் தடையை ஏற்படுத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.