முறைகேடுகளை தடுக்க தனித்துவ அடையாள எண்ணுடன் 11 லட்சம் மின்மீட்டர் கொள்முதல்


சென்னை: தரமான மின்சாதனங்கள் வாங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், தனித்துவ அடையாள எண்ணுடன் கூடிய 11 லட்சம் மீட்டர்களை மின்வாரியம் கொள்முதல் செய்துள்ளது.

வீடு, வணிக நிறுவனம், தொழிற்சாலைகளில் மின்பயன்பாட்டை கணக்கெடுக்கும் மின்மீட்டர், மின்மாற்றிகள் உள்ளிட்ட சாதனங்கள் டெண்டர் மூலமாக தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படுகின்றன. இதற்காக ஆண்டுதோறும்பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.

இதில் பங்கேற்கும் நிறுவனங்கள், தொழில்நுட்ப சோதனையில் தேர்வு செய்யப்படுவதற்காக, மாதிரிக்காக தரமான மின்சாதனங்களை வழங்குகின்றன. அதேநேரம், டெண்டரில் தேர்வான பிறகு அதே தரத்துடன் கூடிய சாதனங்களை விநியோகம் செய்வது இல்லை. இதனால், தரமற்ற சாதனங்கள் விரைவில் பழுதடைகின்றன.

இந்த முறைகேடுகளை தடுக்க,மின்மீட்டர், மின்மாற்றி, மின்கம்பம் ஆகியவற்றுக்கு தனித்துவ அடையாள எண் வழங்கும் திட்டத்தை மின்வாரியம் கடந்த ஆண்டு நவம்பர்மாதம் தொடங்கியது. அதன்படி, மின்மீட்டரில் கியூஆர் கோடு உடன் 16 இலக்கத்திலும், மின்மாற்றியில் 15 இலக்கத்திலும், மின்கம்பத்தில் 13 இலக்கத்திலும் அடையாள எண் இருக்கும்.

மின்வாரியம் வழங்கும் இந்த தனித்துவ எண்ணை அச்சிட்டுதான் அந்த சாதனங்களை நிறுவனங்கள் வழங்க வேண்டும். இந்த விவரங் கள் கணினியில் பதிவு செய்யப் படும்.

இதன்மூலம், சம்பந்தப்பட்ட சாதனங்கள் எந்த நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டது, எந்தபிரிவு அலுவலகத்துக்கு வழங்கப்பட்டது, எங்கு பொருத்தப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களை உடனே அறிய முடியும்.

அந்த வகையில், தற்போது 11.45 லட்சம் மின்மீட்டர்கள், 9,500 மின்மாற்றிகள் தனித்துவ எண்ணுடன் வாங்கப்பட்டுள்ளன. இதன்மூலம், இந்த சாதனங்கள் பழுதானால், அதை வழங்கிய நிறுவனம் எது என்பது உடனடியாக கண்டறியப்பட்டு, மாற்றித் தரவோ, சரிசெய்து தரவோ உடனே நடவடிக்கை எடுக்கப்படும். இனி அனைத்து மின்சாதனங்களும் தனித்துவ எண்ணுடன் வாங்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

x