10-க்கும் மேற்பட்டோரை கடித்த வளர்ப்பு நாய்: பொதுமக்கள் போலீசில் புகார் @ மதுரை


மதுரை: மேலூர் அருகே 10க்கும் மேற்பட்டோரை கடித்து காயப்படுத்தியுள்ள வளர்ப்பு நாயை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு கிராமத்தில் கருப்பையா என்பவருக்கு சொந்தமான வீட்டில் வளர்க்கப்படும் நாய் ஒன்று அப்பகுதியில் நடந்து சென்ற கேசவன் என்பவரை கடித்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

நாய் கடித்து தற்போது தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் இன்று (மே 28) அவர் குவைத்துக்கு வேலைக்காக செல்ல வேண்டிய பயணம் விமான நிலைய அதிகாரிகளால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கேசவன், இதேபோன்று இப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்டோரை கடித்து காயப்படுத்தி உள்ள இந்த நாயை ஊராட்சி நிர்வாகம் பாதுகாப்போடு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கீழவளவு கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் தன் வீட்டில் இரண்டு நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்த்து வருகிறார். இதில் ஒரு நாய் அப்பகுதியில் செல்வோரை கொடூரமாக கடித்து காயப்படுத்துவதாகவும், இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் செல்லவே அச்சப்படுவதாகவும் அப்பகுதி குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர்.

குவைத் நாட்டுக்கு வேலைக்கு செல்ல இருந்த கேசவன் என்பவரை நாய் கடித்து தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் விமானத்தில் பயணிக்க தகுதியற்றவர் என கூறி அவனது பயணத்தை விமான நிலைய அதிகாரிகள் ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ள கேசவனின் உறவினர்கள் இதனால் அவருடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

எனவே இதுபோன்று தொடர்ந்து அப்பகுதியில் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோரை கடித்து காயப்படுத்தியுள்ள நாயை பாதுகாப்பாக அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை சொல்லியும் நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.