போதைப்பொருட்களை கட்டுப்படுத்த ‘மிஷன் இளமை’ திட்டம்: புதுச்சேரி காவல்துறை புதுமுயற்சி


புதுச்சேரி: “போலீஸார் நடவடிக்கையால் கஞ்சா போதைப்பொருள் நடமாட்டம் குறைந்துள்ளது. முற்றிலும் நீங்கும் வரை சோதனை நடவடிக்கைகள் தொடரும்” என்று புதுச்சேரி டிஜிபி ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார்.

புதுச்சேரியில் கஞ்சா, போதைப்பொருட்கள் விற்பனையை மூன்று மாதங்களில் முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும் என ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

அதில் ஒருப்பகுதியாக புதுச்சேரி பாண்டி மெரினாவில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வை உருவாக்க போலீஸார் பீச் வாலிபால் போட்டியை இளையோருக்காக ஏற்பாடு செய்துள்ளனர்.

மூன்று நாட்கள் நடக்கும் இப்போட்டியை புதுச்சேரி டிஜிபி ஸ்ரீனிவாஸ் இன்று மாலை தொடக்கி வைத்தார். தினமும் மாலை தொடங்கி இரவு வரை போட்டிகள் நடக்கின்றன. இந்நிகழ்வுக்கு பிறகு புதுச்சேரி டிஜிபி ஸ்ரீனிவாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வை இளையோருக்கு ஏற்படுத்த சில நாட்களுக்கு முன்பு கேரம் போட்டிகள், மோட்டார் சைக்கிள் பேரணி, வாக்கத்தான் என பலவித போட்டிகளை நடத்தி வருகிறோம்.

இது இளையோரையும், போலீஸாரையும் நெருக்கமாக செயல்பட உதவும். போதைப்பொருட்களை தவிர்த்து, ஆரோக்கியமான சமூகம் அமையவும், எதிர்காலம் சிறப்பாக அமைய இந்நடவடிக்கைகளை எடுக்கிறோம். போதைப்பொருட்களில் இருந்து விலகி இருக்கவும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி போதையை தவிர்த்து ஆரோக்கிய வாழ்வை இளையோர் வாழ வேண்டும் என்பதே இந்நிகழ்வுக்கான இலக்காகும்.

போதைப்பொருட்களை பிடிக்க குழுக்கள் அமைத்து நடவடிக்கை தொடர்ந்து எடுக்கிறோம். தற்போது போதைப் பொருள் புழக்கம் குறைந்துள்ளது. இது மேலும் தொடரும். போதைப்பொருள்கள் விற்பனை முற்றிலுமாக நீங்கும் வரை சோதனை நடவடிக்கைகள் தொடரும்.

கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் பிரச்சினை போலீஸாருடையது மட்டுமல்ல. சமூகத்துக்கும் இதில் பொறுப்புண்டு. தம் குழந்தைகள் செயல்பாடுகளை பெற்றோர்கள், கல்லூரிகளில் பேராசிரியர்கள் கவனிக்க வேண்டும். சமூகத்துக்கும் விழிப்புணர்வு தேவை.

தற்போது மக்கள் இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருகிறார்கள். போதையில் இருக்கும் இளையோர் அதிலிருந்து வெளியேறி வாழ்க்கையை ரசித்து வாழவேண்டும் என்றுதான் இப்போட்டிகளை நடத்துகிறோம்” இவ்வாறு டிஜிபி ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார்.

மிஷன் இளமை: இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், “இளைஞர்களின் ஆற்றலை ஆக்கபூர்வமான மற்றும் நேர்மறையான திசையில் செலுத்தும் நோக்கத்துடன் புதுச்சேரி காவல்துறை “மிஷன் இளமை" என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. அதில், இளைஞர்கள் பயனுள்ள நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில், விளையாட்டு நிகழ்வுகள், தொழில் பயிற்சி, தேர்வுகளுக்கான பயிற்சி போன்ற பல்வேறு நடவடிக்கைகள் நடத்த உத்தேசித்துள்ளனர்.

இத்திட்டத்தில், வேலையில்லாத இளைஞர்கள், திறமையுள்ள விளையாட்டு வீரர்கள், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் போன்றோர் தீவிரமாக ஈடுபடுத்தப்படுவதோடு, சிறார் குற்றவாளிகள் மற்றும் குற்றப் பதிவுகள் உள்ள நபர்களை இந்த முயற்சியில் பங்கேற்கச் செய்ய சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளது" என்றனர்.

x