எதிர்பார்த்த மழை இல்லை: சிறுவாணி அணை நீர்மட்டம் 10 அடியாக குறைந்தது


கோவை: கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணை, கேரளா மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில், மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. சிறுவாணி அணையிலிருந்து எடுக்கப்படும் குடிநீர் அங்கிருந்து சாடிவயல் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.

அதன் பின்னர், வழியோரம் உள்ள 22-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும், மாநகராட்சியின் 30 வார்டுகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது. சிறுவாணி அணையில் கடந்த சில வாரங்களாக நீர்மட்டம் குறைந்து இருந்தது. இந்நிலையில், கடந்த வாரங்களில் சிறுவாணி அணை மற்றும் அடிவாரப் பகுதிகளில் கோடை மழை பெய்தது. இதனால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. இந்நிலையில், சிறுவாணி அணையில் கடந்த சில நாட்களாக மழையளவு குறைந்து காணப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘‘தென்மேற்கு பருவமழைக்காலத்தில் சிறுவாணி அணையில் மழைநீர் இருக்கும். அதேசமயம், கோடை மழையின் போதும் சிலநாட்கள் சிறுவாணி அணையில் மழைநீர் இருந்தது.

இந்நிலையில் கடந்த 25-ம் தேதி நிலவரப்படி சிறுவாணி அணையின் அடிவாரத்தில் 3 மில்லிமீட்டர், அணையில் 6 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்தது. அதன் பின்னர், கடந்த இருநாட்களாக மழை இல்லை. கடந்த 25-ம் தேதி அணையின் நீர்மட்டம் 10.36 அடியாக இருந்தது.

இதுவே மே 27 நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 10 அடியாக குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி சிறுவாணி அணையிலிருந்து 44.30 எம்எல்டி குடிநீர் எடுக்கப்பட்டது. இதேநிலையில் நீர் எடுப்பு தொடர்ந்தால், வரும் ஜூலை மாதம் முதல்வாரம் வரை மாநகர் உள்ளிட்ட தேவையான பகுதிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் விநியோகிக்க முடியும்’’ என்றனர்.