வேளாண் பணிகளுக்கு வாடகைக்குத் தர ட்ரோன்களை வாங்கியது கரூர் மாவட்ட கூட்டுறவுத் துறை


கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் ட்ரோன்கள் செயல் முறை விளக்கத்தை பார்வையிடுகிறார் ஆட்சியர் மீ.தங்கவேல். அருகில் கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளர் ப.கந்தராஜா உள்ளிட்டோர். | படம்: க.ராதாகிருஷ்ணன்

கரூர்: வேளாண் பணிகளுக்கு வாடகைக்கு தருவதற்காக கரூர் மாவட்ட கூட்டுறவுத் துறை ட்ரோன்களை வாங்கி இருக்கிறது.

அண்மைக் காலமாக கிராமங்களிலேயே கூட விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பது அரிதாகி விட்டது. இதனால் உழவு, அறுவடை போன்ற விவசாய பணிகள் இயந்திரமயமாகிவிட்ட நிலையில் அண்மைக்காலமாக பூச்சி மருந்து அடித்தல், உரம் தெளித்தல் போன்ற பணிகளுக்கு தனியார் ட்ரோன்களை விவசாயிகள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். தனியார் ட்ரோன்களுக்கு அதிகமான வாடகை கேட்பதால் வேளாண் துறை மூலம் ட்ரோன்களை வாங்கி விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு அளிக்க வேண்டும் என விவசாயிகளிடம் எதிர்பார்ப்பு எழுந்தது.

இதையடுத்து வேளாண் பணிகளில் ட்ரோன்களை பயன்படுத்துவது குறித்து அறிந்து கொள்ளவும், ட்ரோன்களை இயக்குவது குறித்து பயிற்சி பெறவும் கரூர் மாவட்ட விவசாயிகள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ட்ரோன் பயிற்சி, செயல்பாடு குறித்து இரண்டு விவசாயிகள் கேட்டனர்.

இதையடுத்து அப்போதைய ஆட்சியர் த.பிரபு சங்கர், "விவசாயிகள் ட்ரோன் பயன்பாடு குறித்து ஆர்வமாக இருப்பதால் வேளாண் துறை சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் ட்ரோன் விதை விதைப்பு, உரம் தெளித்தல் ஆகிய செயல் விளக்கம் அளிப்பதுடன் விவசாயிகளுக்கு பயிற்சியும் அளிக்கலாம்” என்றார்.

இதற்கு கூட்டுறவு இணைப்பதிவாளர் ப.கந்தராஜா அளித்த பதிலில், "வேளாண் உள் கட்டமைப்பு வசதி திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் ட்ரோன்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாய கடன் பெறுகிறவர்கள் உரம், திரவ உரம் ஆகியவை பெறும்போது அவர்கள் உரம் தெளிப்பதற்கு டரோன்கள் வாடகைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் ட்ரோன்கள் வாங்கப்படும்” என்றார்.

தமிழகம் முழுவதும் கூட்டுறவுத் துறை மூலம் வேளாண் அடிப்படை வசதி மேம்பாட்டு திட்ட த்தின் கீழ் ட்ரோன்கள் வாங்க திட்டமிடப்பட்டது. கரூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் 84 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பயிர்க் கடன் பெறும் விவசாயிகளுக்கு கடன் தொகையின் ஒரு பகுதியாக உரங்களாக வழங்கப்பட்டு வருகின்றன.

கூட்டுறவு கடன் சங்கங்களின் பயிர்க் கடன் பெறும் விவசாயிகளுக்கு உரங்கள் வழங்கப்படுவதால் உரங்களை தெளிப்பதற்கு ட்ரோன்களை பயன்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு ட்ரோன்களை வாடகைக்கு வழங்கும் வகையில் தற்போது 3 ட்ரோன்கள் வாங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் விவசாயிகள் ட்ரோன்களை வாடகைக்கு பெற்று வேளாண் பணிகளை மேற்கொள்ள முடியும்.

கூட்டுறவுத் துறை மூலம் விவசாய பயன்பாட்டிற்கு வாங்கப்பட்ட ட்ரோன்களின் செயல்முறை விளக்கம் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மதியம் நடைபெற்றது. அப்போது ட்ரோன்கள் மூலம் உரம் தெளிப்பது எப்படி என செயல் முறை விளக்கம் காண்பிக்கப் பட்டது. ஆட்சியர் மீ.தங்கவேல் பார்வையிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அப்போது பேசிய கரூர் மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் ப.கந்தராஜா, "கூட்டுறவுத் துறையின் வேளாண் அடிப்படை வசதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்கு 3 ட்ரோன்கள் வாங்கப்பட்டுள்ளன. இவை இனுங்கூர், கள்ளை, சிந்தலாவடி ஆகிய வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு அளிக்கப்படும். ட்ரோன்களை இயக்க ஊழியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்” என்றார்.