சிவகங்கை அரசு மருத்துவமனையில் பல்நோக்கு பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டம்


சிவகங்கை மருத்துவமனை

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவமனையில் ஊதிய நிலுவைத் தொகை வழங்காததை கண்டித்து பல்நோக்கு பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவுட்சோர்சிங் முறையில் 298 பல்நோக்குப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தூய்மை, காவல் போன்ற பணிகளைச் செய்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களுக்கு ஓராண்டாக ஊதிய நிலுவை வழங்கப்படவில்லை.

அதேபோல் விடுமுறை நாட்கள் மற்றும் கூடுதல் நேரம் பணிபுரிவதற்கும் ஊதியம் வழங்குவதில்லை. இதைக் கண்டித்து இன்று (திங்கட்கிழமை) காலை முதல் பல்நோக்குப் பணியாளர்கள் பணியை புறக்கணித்து, மருத்துவமனை வாயில் முன், அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மருத்துவமனை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அவர்களிடம் மருத்துவமனை நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.