குமரி படகு இல்லத்தில் பழுதடைந்த அலுவலகங்களை சீரமைக்க ஆட்சியர் அறிவுறுத்தல் 


 கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு இல்ல அலுவலகம், மற்றும் படகு தள பகுதிகளை குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பார்வையிட்டார்.

கன்னியாகுமரி: கன்னியாகுமரி படகு இல்லத்தில் பழுதான நிலையில் காணப்படும் அலுவலகங்களை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு, குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவுறுத்தி உள்ளார்.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் முதன்மையான பொழுதுபோக்கு அம்சமாக கடல் நடுவே விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் மேற்கொள்ளப்படும் படகு போக்குவரத்து உள்ளது. தற்போது இரு பாறைகளுக்கும் இடையே கண்ணாடி இழைப்பாலம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில் விவேகானந்தர் பாறைக்கு மட்டும் படகு சேவை நடந்து வருகிறது.

அவ்வப்போது கடல் நீர்மட்டம் தாழ்வால் படகு சேவை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் இன்று கன்னியாகுமரி கடற்கரையியில் அமைந்துள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு இல்ல அலுவலகம் மற்றும் வளாகங்களை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கன்னியாகுமரியில் அமைந்துள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு தளத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில் தினமும் கால நிலைக்கு ஏற்ப விவேகானந்தர் பாறைக்கு கடலுக்குள் சுற்றுலா படகு போக்குவரத்து சென்று வருகிறது.

படகுகள் பராமரிக்கப்படும் விதம் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தேன். படகு இல்லத்தில் அலுவலக கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. அவற்றை சீரமைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கும்படி துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறேன்'' என்றார்.