பட்டாசு ஆலைகளில் ரூ.30 கோடிக்கு உற்பத்தி பாதிப்பு: 16-வது நாளை கடந்த வேலைநிறுத்தம் @ சிவகாசி


சிவகாசி அருகே மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலை.

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1,100-க்கும் மேற்பட்டபட்டாசு ஆலைகள் செயல்படுகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

அண்மையில் செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, பட்டாசு ஆலைகளில்மாவட்ட ஆட்சியர் அமைத்த 5 குழுக்கள், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில் தனி வட்டாட்சியர், வருவாய் துறையினர் மற்றும் பெசோ அதிகாரிகள் தனித்தனியாக ஆய்வுநடத்தினர்.

தொடர்ந்து, 90-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளின் உற்பத்தி உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனர். அதிகாரிகளின் ஆய்வைக் கண்டித்தும், சிறு பட்டாசு ஆலைகளைக் குறி வைத்து நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறியும், தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டாப்மா) சார்பில் மே 24-ம் தேதி முதல் சிறு உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விருதுநகர் ஆட்சியர் முன்னிைலயில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், 15 நாட்களுக்கும் மேலாகவேலைநிறுத்தப் போராட்டம் தொடர்கிறது. மேலும், அதிகாரிகளின் ஆய்வு மற்றும் மழை காரணமாகவும் பல பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ரூ.30கோடி அளவுக்கு பட்டாசு உற்பத்திபாதிக்கப்பட்டதுடன், 10 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

ஜூலை மாதம் தீபாவளி சீசன் உற்பத்தித் தொடங்க உள்ள நிலையில், மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளைத் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடன் வசூலிக்க வர வேண்டாம்: சிவகாசி - சாத்தூர் சாலையில் உள்ள மீனம்பட்டி சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள், பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால், அவர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இதனால் கடன் கொடுத்தோர் மற்றும் மகளிர் குழுக்களுக்குக் கடன் கொடுத்தோர் ஒரு மாதத்துக்குக் கடன் வசூலிக்க வர வேண்டாம் என்று மீனம்பட்டியில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டு உள்ளது.

x