காங்கிரஸ் பிரமுகர் மர்ம மரண வழக்கு: தோட்டத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் மீண்டும் ஆய்வு


நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் தோட்டத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட சிபிசிஐடி அதிகாரிகள்.

திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் கேபிகே.ஜெயக்குமார் தனசிங். இவரது சடலம் கடந்த மாதம் 4-ம்தேதி, திசையன்விளை அருகே கரைசுத்துபுதூரில் உள்ள அவரதுவீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில்கிடந்தது தெரிய வந்தது.

உடல் முழுவதும் எரிந்த நிலையில் இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து தெரியவில்லை.

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தனிப்படையினர் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு கடந்த மே 21-ம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

சிபிசிஐடி ஏடிஎஸ்பி சங்கர், ஆய்வாளர் உலகராணி தலைமையிலான இரு குழுவினர், கடந்த 2 வாரங்களாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வழக்கில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் விசாரணை அறிக்கையை, சிபிசிஐடி ஐ.ஜி. அன்புவிடம் நேற்று முன்தினம் சமர்ப்பித்திருந்தனர்.

இந்நிலையில், ஆய்வாளர் உலக ராணி தலைமையில் 30-க்கும் மேற்பட்ட தடயவியல் நிபுணர்கள், வெடிகுண்டு நிபுணர்கள் கரைசுத்துப் புதூருக்கு நேற்று சென்றனர். அங்கு ஜெயக்குமார் உடல் கண்டெடுக்கப்பட்ட தோட்டத்தில், அவர்கள் தீவிர சோதனை நடத்தினர்.

சுமார் 7 ஏக்கர் பரப்பு கொண்ட இந்த தோட்டத்தில் ஏற்கெனவே தனிப்படை போலீஸாரும், சிபிசிஐடி போலீஸாரும் நடத்திய சோதனையில் போதுமான தடயங்கள் சிக்கவில்லை. ஏற்கெனவே ஒரு ஏக்கர் பரப்பில் நடத்தப்பட்ட சோதனை நேற்று 7 ஏக்கர் பரப்பில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருநெல்வேலி மட்டுமின்றி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் சிபிசிஐடி அதிகாரிகள் குழுவினர் வரவழைக்கப்பட்டு, புதிய தடயங்கள் ஏதும் சிக்குகிறதா என்று சோதனை நடத்தப்பட்டது.